யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-03-13

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம். 15:5-12, 17-18, 21,பதிலுரைப்பாடல்: திபா: 27: 1, 7-9, 13-14,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கடவுளின் அன்பு மக்களே, மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசுவின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 15:5-12, 17-18, 21

அந்நாட்களில், ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். "ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்." அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு:
பதிலுரைப்பாடல்: திபா: 27: 1, 7-9, 13-14

ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங் கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ;புறப்படு, அவரது முகத்தை நாடு ; என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். பல்லவி

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்: நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கி விடாதிரும்: நீரே எனக்குத் துணை: என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடா தேயும். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்:
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1

சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு: வயிறே அவர்கள் தெய்வம்: மானக்கேடே அவர்கள் பெருமை: அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு: அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி: நீங்களே, என் வெற்றி வாகை: அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ; என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ; என்று ஒரு குரல் ஒலித்தது. (மாற் 9:7) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36

அக்காலத்தில், இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது: அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்: நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உடன்படிக்கையின் நாயகனே! எம் இறைவா!

திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறைமகன் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் வழியில் செல்லவும், எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று பற்றி நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்! என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தை பயன்படுத்த வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலமளிக்கும் இறைவா!

புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

ரஷ்ய நாட்டிற்கும், உக்ரைன் நாட்டிற்கும் நடக்கும் இந்த யுத்தம் நிறைவு பெற வேண்டுமென்று உம்மிடம் தாழ்ந்து மன்றாடுகின்றோம். தகப்பனே மக்களின் துயரினைக் கண்ணோக்கியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா!

எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் திருத்தூதர்களைப் போல் வாழ்ந்திடவும், விண்ணகமே எமது தாய் நாடு, அங்கிருந்து வரும் இறைமகன் இயேசுவிற்காக காத்திருக்கவும், மாட்சிமைக்குரிய அவரின் உடல் போன்று உருமாற்றம் பெற்றிடவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நிலையான நாடு விண்ணகமே என்ற உணர்த்திய எம் இறைவா!

அரசியல் தலைவர்கள் இவ்வுலகச் சொத்துக்களையும் புகழையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு மக்களின் நலன்கள் காக்கும் தன்னலமற்ற போக்கை கடைப்பிடிக்கவும், நாட்டில் நிலவும் குழப்பங்களிலும், வேலை நிறுத்தப் போராட்டங்களிலும் சமாதானப் போக்கை கையாண்டு விருப்பு வெறுப்புகளை விடுத்து விரைவில் மக்களுக்கு நல்லதோரு எதிர்கலத்தையும் வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் ‘இவருக்குச் செவி கொடுங்கள்!’ என்ற உமது கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உம்மையே எளிமையாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

எவ்வளவு மாட்சி நிறைந்த நீர், எவ்வளவு எளிமையாய், பணிவாய் பணியாற்றினீர். இவ்வாறு, தந்தைக்குப் பெருமை சேர்த்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் உம்மைப் போல தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கவும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

கூடாரம் அமைப்போம்

பேதுருவின் நியாயமான ஆசை. மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் அமைக்க விரும்பினார். கூடாரங்கள் விவிலியத்தில் இறைப் பிரசன்னத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் பாலை வனப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களோடு யாவே இறைவன் தனக்கென தனி கூடாரம் அமைத்துக் குடிகொண்டார். "மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம்அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்." (விடுதலைப் பயணம் 33.7)

இறை மாட்சியைக் கண்ட பேதுரு அத் தெய்வீகப் பிரசன்னம் தங்களோடு என்றும் தங்கியிருக்க விரும்பினார்.உண்மையில் இறைவன் நம்மோடு வாழும் தெய்வம். இம்மானுவேல் என்பது அவரது பெயர்.உலகம் முடியும்வரை நம்மோடு இருக்கும் தெய்வம். பேதுருவின் ஆசையிலும் இறைவனின் இயல்பிலும் ஒரே கருத்து உள்ளோடுவதை உணரமுடிகிறது.

இதைச் செயல்படுத்துவதில் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. மாட்சியும் பெருமையும் அவரைக் கவர்ந்தது. பேரொளி, பெரிய ஆட்கள் அவருக்குப் பெருமை சேர்த்தது. உயர்ந்த மலை உடலுக்கு இதமாக இருந்தது. இத்தகைய சுனம் கண்டதால், அங்கு ஆண்டவனுக்குக் கூடாரம் அமைப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக, தன் பாடுகள், மரணம் இவற்றால் மாட்சி அடைவதை அவர் விரும்பினார். "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்பதை இயேசு கூடாரம் அமைப்பதின் கொள்கையாகக் கொண்டார். மாய சுகத்தில் அமைக்கும் கூடாரம் நிலைக்காது. உழைத்து உருவாக்கிய கூடாரம் இறைவன் விரும்புவது. அங்கு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்க எங்கள் இதயத்தைத் திறந்தருளும்.