யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2022-03-12




முதல் வாசகம்

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு. ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாக வும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய். நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 119: 1-2. 4-5. 7-8

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! -பல்லவி

7 உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன். 8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பகையை பாசத்தால் வெல்லுக

"உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" என்னும் (மத்தேயு 5:43) பழைய ஏற்பாட்டின் லேவியர்19:18ன் மேற்கோளாகும். ஆனால் மத்தேயு கையாளும் இம் மேற்கோளில் "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" என்னும் பகுதி காணப்படவில்லை. காணப்படாவிட்டாலும் இது அவர்களுடைய எழுதப்படாத சட்டமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், இயேசு இதை ஒரு சட்டமாகவே கருதியதாக மத்தேயு எழுதியிருக்க வேண்டும். இதில் தவறு ஏதும் இல்லை.இது அவர்களின் அன்றாட வாழ்கை முறையாக இருந்தது.எழுத்தில் இல்லை, அவ்வளவுதான்.

இப்பகுதியில் நம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் எவ்வாறு எதிர்கொள்வது, நமக்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதற்கான யுக்தியை இயேசு நமக்குச் சொல்கிறார். எதிரியை, அல்லது பகைவனைப் பகைவனாகக் காணமுற்பட்டால், அந்த பகைக்குள் நாமே மூழ்க நேரிடும்.இயேசு சொல்வதுபோல பகைவனையும் அன்பு செய்யவும் அவனுக்காகச் செபிக்கவும் பழகிக்கொண்டால், பகையை வெல்ல முடியும். பகைவனை வென்ற மகிழ்வில் வாழலாம்.எதிரியை எதிர்த்து அவனைப் பலசாலியாக்கிவிடுகிறோம். 'உனது பட்டரையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஏனென்றால் என்னை எதிரியாக, நீ நினைக்கிறாயே தவிற, உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை' - பெரிய மனிதரின் வார்த்தைகள். இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய வார்த்தைகள்.நீங்களும் இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

இறைவா, பழி வாங்கும் மனப்பான்மையை நாங்கள் களைந்திட அருள்தாரும். ஆமென்.