யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-02-27

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7,பதிலுரைப்பாடல்: திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி:1a),திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 15:54-58,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 39-45)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம். இந்த ஆண்டு தவக்காலத்திற்கு முந்திய வாரமாக பொதுக்காலம் எட்டு அமைகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமையின் வாயிலாகப் பல அறிவுரைகளை நம் மனதில் பதிவு செய்கின்றார். நாம் அடிக்கடிப் பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வரவேண்டும். தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழிக்காட்டுவோம். இத்திருப்பலியில் உளமாறக் கலந்து மாற்றம் காண்போம்.



முதல் வாசகம்

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கப்படுகின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே; பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று;
பதிலுரைப்பாடல்: திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி:1a)

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 15:54-58

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: ;சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது.சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? ;பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்: நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். (பிலி 2: 15-16 காண்க) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 39-45

மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ;பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.;நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ;உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? ; என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். ;கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை: நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை: முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவ+லத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நலமளிக்கும் இறைவா!

புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உள்ளத்தின் ஆழத்தைக் காண்கிறவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் என்று மொழிந்தீரே. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். அந்த உள்ளத்திலிருந்து நாங்கள் பிறரைப் பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற, வளர்த்துவிடுகின்ற சொற்களைப் பேச உமது தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணைக் கடலாகிய எம் இறைவா!

புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா!

எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா!

எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''முதலில் உங்கள் கண்களில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள்'' (லூக்கா 6:42)

நம்மில் இருக்கின்ற குறைகளை நாம் பெரிதாகக் கருதாமல் பிறருடைய குறைகளைப் பற்றியே அலட்டிக்கொள்வது ஓர் அனுபவ உண்மை. மனிதரிடையே நிலவும் இப்போக்கினை ஒரு சிறிய உவமை வழியாக விளக்குகிறார் இயேசு. நம் கண்கள் தெளிவாக இருந்தால்தான் நம் பார்வையும் தெளிவாக இருக்கும். கண்ணில் ஒரு சிறிய தூசு விழுந்தால்கூட கண் தானாகவே மூடிக்கொள்ளும்; அப்போது நம் பார்வையும் தெளிவு குன்றிவிடும். ஆனால் ஒரு பெரிய மரத்துண்டை எடுத்துக் கண்ணில் போட்டால் நம் பார்வை முற்றிலுமாக மறைந்துபோய் நாம் பார்வையற்றோர் போல ஆகிவிடுவோம். நமது பார்வை தெளிவாக இருக்கவேண்டும் என்றால் நம் கண் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நம் கண்ணில் இருக்கின்ற மரக்கட்டையை அகற்றுவதுதான். நம் குறைகள் மரக்கட்டை போல இருந்து நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணராமல் இருக்கச் செய்துவிடக்கூடும். அதே நேரத்தில் பிறருடைய வாழ்வில் நிலவுகின்ற சிறுசிறு குறைகளை நாம் பெரிதுபடுத்துவதோடு கூட அவர்கள்மீது குறைகாணவும் தொடங்கிவிடுவோம். இதுவே பெரிய மரக்கட்டைக்கும் சிறிய துரும்புக்கும் இடையே உள்ள வேறுபாடு.

பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நம் குற்றங்களைத் திருத்தும்போது நாம் பிறருக்கும் ஒரு புதிய முன்மாதிரியாக மாறுவோம். அதைக் கண்டு அவர்களும் கடவுளிடம் திரும்புகின்ற வாய்ப்புப் பிறக்கலாம். எனவே, சகோதர அன்பின் ஒரு முக்கியமான அம்சம் நம் பகைவரையும் அன்புசெய்து, நம் சகோதரர் சகோதரிகளிடம் இன்னின்ன குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவதற்குச் செய்யப்படுகின்ற முயற்சி ஆகும். குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப் பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல் நாம் தெளிந்த பார்வை உடைய மனிதராக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உண்மைநிலையை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.