யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-02-20

(இன்றைய வாசகங்கள்: சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23.,திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49, லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்''

அன்பர்களே, பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பிறருக்கு அன்பு காட்டி, அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொண்டால் நாமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்; அன்புசெய்யத் தவறுவோர் தம்மைப் பிறர் அன்புசெய்ய வேண்டும் எனக் கேட்கலாமா? இதை விளக்குவதற்குத் தான் இயேசு ''நீங்கள் அளந்து கொடுப்பதற்கு ஏற்ப உங்களுக்கும் அளந்து தரப்படும்'' என்றார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு, ''பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்று கூறினார். சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைகாணச் செபிப்போம்.



முதல் வாசகம்

ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார்; இருப்பினும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உம்மேல் நான் கை வைக்கவில்லை
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23.

அந்நாள்களில் சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக, இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன், அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவரது ஈட்டி தரையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதியக் குத்தப் போகிறேன்” என்றான். ஆனால் தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார். அவ்வாறே தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டபின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவும் இல்லை; அறியவும் இல்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர். பின்பு தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின்மீது நின்றார். அவர்களுக்கிடையே மிகுந்த இடைவெளி இருந்தது. தாவீது மறுமொழியாக, “அரசே, உம் ஈட்டி இதோ உள்ளது; இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டுபோகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கவில்லை'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ` பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49

சகோதரர் சகோதரிகளே, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நலமளிக்கும் இறைவா!

புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணைக் கடலாகிய எம் இறைவா!

வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே எங்கள்மீது உமது அருள்கொடைகளை வாரி வழங்குவதற்காக உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். உம்மிடமிருந்து இன்னும் ஏராளமான நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டும், பகிர்வு செய்ய வேண்டும் என்று நீர் விடுக்கம் அழைப்புக்காக நன்றி. கொடுக்கின்ற, பகிர்கின்ற உள்ளத்தை எங்களுக்குத் தந்து அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணைக் கடலாகிய எம் இறைவா!

புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணைக் கடலாகிய எம் இறைவா!

இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்து அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்கா 6:39)

இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பிறருக்கு அன்பு காட்டி, அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொண்டால் நாமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்; அன்புசெய்யத் தவறுவோர் தம்மைப் பிறர் அன்புசெய்ய வேண்டும் எனக் கேட்கலாமா? இதை விளக்குவதற்குத் தான் இயேசு ''நீங்கள் அளந்து கொடுப்பதற்கு ஏற்ப உங்களுக்கும் அளந்து தரப்படும்'' என்றார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு, ''பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்று கூறினார். இயேசுவின் போதனையைச் சுருக்கமாகத் தருகின்ற இக்கூற்றினைப் ''பொன்விதி'' எனவும் கூறுவர்.

சிலர் தாராளமாக அளந்துகொடுக்கத் தயக்கம் காட்டுவர். பெருமளவில் பிறருக்குக் கொடுத்துவிட்டால் தமக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமே என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் நாம் தாராள உள்ளத்தோடு கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோருகிறார் இயேசு. நம்மிடம் இருக்கின்ற பொருள்களை மட்டுமல்ல, நம் நேரத்தையும் திறமைகளையும் நாம் பிறருக்கு உதவிசெய்வதில் செலவிடும்போது நாம் தாராள உள்ளத்தோடு செயல்படுகிறோம் எனலாம். நாம் அளந்தளிப்பது பிறருக்குத் தாராளமாகச் சென்று சேரவேண்டும் என்றால் நம் உள்ளம் அன்புணர்வினால் நிறைய வேண்டும்; கடவுள் நம் மட்டில் காட்டிய தாராளத்தை நாம் பிறர் மட்டிலும் காட்ட வேண்டும். எனவே, ''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்'' (லூக்கா 6:36) என இயேசு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில் நம் உள்ளத்திலும் வாழ்விலும் இரக்கம் என்னும் நற்பண்பு மேலோங்கி விளங்கிட நாம் முயன்றிட வேண்டும். கடவுளிடமிருந்து இரக்கம் பெற்றோர் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தவறமாட்டார்கள். ஆனால், கடவுளின் இரக்கத்தை உண்மையாகவே அனுபவத்து, நன்றியோடு ஏற்காதோர் இரக்கத்தின் உள்பொருளையே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தயங்குவார்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.