யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-02-18

புனித பீட்டர்தமியான்




முதல் வாசகம்

உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26

என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ``நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்'' என்பாரென்றால், அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும். ஆனால், ``ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன'' என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன. அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? ``ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது. உயிர் இல்லாத உடல் போல, செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 112: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி




நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34 - 9: 1

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்'' என்றார். மேலும் அவர் அவர்களிடம், ``இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்'' (மாற்கு 7:33)

யூத இனத்தைச் சேராத பிற இன மக்கள் வாழ்ந்த பகுதி தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகும். இயேசு அப்பகுதிகளுக்குச் சென்றார் என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 7:31). அங்கே பிற இனத்தைச் சார்ந்த ஒருரை - காது கேளாவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை - இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்குக் குணம் நல்கிய நிகழ்ச்சியை மாற்கு தத்ரூயஅp;பமாகச் சித்தரிக்கிறார். அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் இல்லை, கேள்வித் திறனும் இல்லை. தாம் போதித்தவற்றை மக்கள் கவனமாகக் ''கேட்க வேண்டும்'' என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மாற் 7:6). அவரிடம் வாய்திறந்து சாதுரியமாக ''பேசிய'' ஒரு பெண்ணின் கோரிக்கையை இயேசு நிறைவேற்றி வைத்தார் (காண்க: மாற் 7:24-30). இப்போது இயேசு ஒரு மனிதருக்குப் ''பேசும்'' திறனையும் ''கேட்கும்'' திறனையும் அளிக்கிறார். ''பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது'' (சாஞா 10:21) என்னும் இறைவாக்கின் அடிப்படையில் இயேசு அம்மனிதருக்கு உள்ளறிவையும் ஞானத்தையும் அளித்தார் எனலாம்.

தனியே அழைத்துச் செல்லுதல், விரல்களைக் காதுகளில் இடுதல், உமிழ்நீரால் தொடுதல் ஆகிய செயல்களை மாற்கு குறிப்பிடுவதன் வழியாக இயேசு உண்மையிலேயே ஒரு ''மருத்துவராக'' செயல்பட்டார் என அறிகிறோம். ஆனால் வெளி அடையாளம் என்பது உள் எதார்த்தத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசு அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் கேள்வித் திறனும் வழங்கிய போது அந்த மனிதரின் உள்ளத்தைத் திறந்தார்; அவருடைய இதயத்தைத் திறந்தார்.அதைத் தொடர்ந்து, கடவுளின் வார்த்தையைக் ''கேட்கவும்'' அதைப் ''பேசவும்'' அந்த மனிதர் முன்வந்தார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நமக்கு இத்தகைய கேள்வித் திறனையும் பேச்சுத் திறனையும் நல்குவார். அப்போது நாம் இயேசுவை மாயஜாலம் நிகழ்த்துகின்ற அதிசய மனிதராகப் பார்க்காமல் கடவுளின் அன்பை நம்மோடு பகிர்கின்ற இறைமகனாக நம்பி ஏற்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு இறைஞானம் அளித்து நல்வழி காட்டும் இயேசுவிடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள அருள்தாரும்.