யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-02-13

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8,திபா 1: 1-2. 3. 4-6 , திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15:12,16-20,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். ஏழைகள் உயர்த்திப் பேசப்படுவதையும், செல்வர்கள் கடுமையாக வார்த்தைகளால் இடித்துரைக்கப்படுவதையும் விவிலியத்தில் பல இடங்களில் காண முடிகிறது.

கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை. இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு. இவ்வுலகுக் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்றச் செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் உணரமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது. வலியோரை அல்ல எளியோரையே இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இவர்கள் நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாமும் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.
திபா 1: 1-2. 3. 4-6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15:12,16-20

சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். ஆனால், இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26

அக்காலத்தில் இயேசு திருத்தூதர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந் திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நலமளிக்கும் இறைவா!

புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணைக் கடலாகிய எம் இறைவா!

மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குறைவையெல்லாம் நிறைவாக்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

ஏழைகளும், அழுவோரும், ஒதுக்கபட்டோரும் பேறுபெற்றோர் என்று மொழிந்தீரே உமக்கு நன்றி. உம்மைப் போல நாங்களும் ஒதுக்கப்பட்டோர்மீது பரிவு காட்ட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணைக் கடலாகிய எம் இறைவா!

இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்து அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்”

வேறு எந்த நற்செய்தி நூலிலும் காணாத அளவு லூக்கா நற்செய்தியில் தான் ஆண்டவர் இயேசு எளியோர்மேல் கொண்ட சிறப்பான பாசத்தைத் தெளிவாகப் பார்க்கிறோம். அதிலும் பேறுகள் பகுதியை மத்தேயு நற்செய்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் வியப்படைவதைத் தவிர்க்க முடியாது. மத்தேயு நற்செய்தியில் எளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்று வாசிக்கிறோம். லுhக்கா நற்செய்தியிலோ ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள் என்னும் செய்தியை எந்தக் குழப்பமுமின்றி தெளிவாகப் பார்க்கிறோம்.

இன்று பெந்தகோஸ்து போதகர்கள் தொலைக்காட்சிகளில் தோன்றி செல்வர்களே நீங்கள் பேறு பெற்றவர்கள் ”. என்னும் செய்தியைப் போதிக்கிறார்கள். நீங்கள் செல்வந்தராக வேண்டுமா, துதியுங்கள், துதியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்”.. என்றெல்லாம் துணிந்து போதிக்கிறார்கள். ஆனால், இயேசுவின் போதனை அது அல்ல, செல்வந்தர்களே, உங்களுக்கு ஐயோ கேடு. ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள”; என்கிறார். ஏழைகள் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருக்கின்றனர். இந்த உண்மையை இன்று மனதில் ஏற்போம்.

மன்றாட்டு:

எளியோரின் புகலிடமான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். அடைக்கலம் புக யாருமே எல்லாத எளியவர்களை, ஏழைகளை நீர் ஆசிர்வதிக்கிறீர். பேறுபெற்றவர்கள் ஆக்குகிறீர். அதற்காக நன்றி கூறுகிறோம். ஏழைகள்தான் விண்ணரசின் முதல் உரிமையாளர்கள் என்பதை உணரும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.