யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2022-02-03




முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:15-17,20-21

15 ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப்பலியைச் செலுத்துவோமாக, அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.16 நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்: அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப்பற்றிக் கணக்கு கொடுக்கவேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.20 என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே.21 அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல்கள் 23:1-6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:30-34

30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.31 அவர் அவர்களிடம், ' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உழைப்பும், ஓய்வும் !

உழைப்புதான் மானிடரின் இலக்கணம் ” என்று கூறினார் கார்ல் மார்க்ஸ். உழைக்காதவர் உண்ணலாகாது” என்றார் பவுலடியார். உழைப்புக்கு இலக்கணமாக யாவே இறைவனையே விவிலியம் எடுத்துக்காட்டாகத் தருகிறது. தொடக்க நுhலின் முதல் அதிகாரங்களில் இறைவன் ஆறு நாள்களில் இந்த உலகையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். ஓய்வின்றி உழைப்பதும் தவறு. உழைப்பின்றி ஓய்வெடுப்பதும் தவறு. நன்கு உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அந்தத் தந்தையின் திருவுளத்திற்கேற்பவே, திருமகன் இயேசுவும் செயல்பட்டார். அதிகாலை செபத்திலிருந்து, பகல் நேர நற்செய்தி அறிவிப்பு, மாலையில் நோயாளர்களைக் குணப்படுத்துதல், இரவில் வீடுகளில் உறவை வளர்த்தல் எனப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார். தம் சீடர்களுக்கும் அந்தப் பயிற்சியை வழங்கினார். எனவேதான், சீடர்கள் திருத்துhதுப் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து #8220;நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ” என்று மொழிந்தார். சற்று ஓய்வெடுங்கள் என்னும் சொல்லாடல் நம் கவனத்தை ஈர்க்கிறது. தேவையான ஓய்வு. இறைவன் நம்மீது அக்கறை உள்ளவர், நம்மைப் புரிந்துகொள்பவர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் அடையாளமாகத் திகழ்கிறதல்லவா?

மன்றாட்டு:

ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நாங்கள் உழைக்கவும், போதுமான உடல், உள்ள, ஆன்ம ஓய்வுபெறவும் வேண்டும் எனத் திருவுளம் கொண்டீரே. உமக்கு நன்றி. நீர் மட்டுமே தர முடிகின்ற அமைதியை, இளைப்பாறுதலை, ஓய்வை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.