யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2022-01-22

0தூய செபஸ்தியார்
முதல் வாசகம்

போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 1: 1-4,11-12,19,23-27

அந்நாள்களில் சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான். ``என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்துவிட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்'' என்று கூறினான். தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத் தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலைவரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள். ‘இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்! இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே! போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்! சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழிந்தன!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!
திருப.பாடல் 80: 1-2. 4-6

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்? 5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்; 6 எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப் பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசுவின் உறவினர்...அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்'' (மாற்கு 3:21)

சில சமயங்களில் பிறர் பேசுவது நமக்கு அர்த்தமற்றதாகத் தோற்றமளித்தால் அவர்களைப் பார்த்து, ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்பதுண்டு. எடுத்துக் கூறப்பட்ட கருத்து முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலோ, குழப்பத்தை உருவாக்கினாலோ, முறையாக விளக்கப்படாமல் போனாலோ நாம் இவ்வாறு கேட்கத் துணிகிறோம். இயேசுவின் உறவினரும் அப்படியே நினைத்தார்கள். அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துவந்தனர். இயேசு அங்குமிங்கும் சென்று, ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் போதித்தார்; மக்கள் அவரைத் தேடிச் சென்று நலம் பெற்றார்கள். எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அவரைத் தொடர்ந்தது. தமக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று இயேசு அறிவித்தார். ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி, மனிதர் ஓய்வு நாளுக்கல்ல என்று முழங்கினார். இயேசு புரிந்த இச்செயல்களும் உரைத்த சொற்களும் பலருக்குப் புரியாத புதிராக இருந்தன. எனவே அவர்கள் இயேசு ''மதிமயங்கி இருக்கிறார்'' (மாற் 3:21) என்று பேசிக் கொண்டார்கள்.

ஒருவிதத்தில் இயேசு மதிமயங்கித்தான் போனார் எனலாம். அவருடைய சிந்தனை முழுவதும் கடவுளைப் பற்றியும் மனிதரின் நலன் பற்றியும் இருந்ததால் தம்மைப் பற்றி எண்ணுவதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. கடவுளிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட பணியைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதிலேயே இயேசு கருத்தாய் இருந்ததால் அவரைப் பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொண்டார்கள். இயேசு கடவுளின் சக்தியால் செயல்பட்டாரா அலகையின் வல்லமையால் அதிசயங்கள் புரிந்தாரா என்று கேட்கும் அளவுக்குச் சிலர் போய்விட்டிருந்தனர். கிறிஸ்துவை நம்புவோர் அவருடைய நற்செய்தியைத் தம் உயிர்மூச்சாக மாற்றும்போது கடவுளுக்காக ''மதிமயங்கி'' செயல்படத் தொடங்குவார்கள். அப்போது ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்னும் கேள்வியை நம்மைப் பார்த்து யாராவது கேட்டால் நாம், ''கடவுளுக்காக நான் பைத்தியம்தான்'' எனப் பதில் கூறமுடியும்.

மன்றாட்டு:

இறைவா, உம் சிந்தனையால் நாங்கள் ஆட்கொள்ளப்பட அருள்தாரும்.