யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-01-21

புனித பிரான்சிஸ் சலேசியார்




முதல் வாசகம்

ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கக்கூடாது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24: 2-20

அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், � `இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்,� என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!� என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப் பார்த்து, �ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது� என்றார். ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து, �அரசே, என் தலைவரே!� என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். பின்பு தாவீது சவுலை நோக்கி, � �தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்� என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், �அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது� என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, �தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்�. ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!� என்றார். தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், �என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?� என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், �நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்.
திருப்பாடல் 57: 1. 2-3. 5,10

1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். பல்லவி

2 உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். 3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். பல்லவி

5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப் பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்' எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்...' என்றார்'' (யோவான் 1:29)

இயேசு யார் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதத்தில் சான்றுபகர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவ்வாறு சான்று பகர்ந்தவர்களில் மிகச் சிறந்தவர் திருமுழுக்கு யோவான் என்றால் மிகையாகாது, யோவான் இயேசு யார் என்பதைப் பல உருவகங்கள் வழியாக விளக்கினார். அவற்றுள் ஒன்றுதான் ''ஆட்டுக்குட்டி'' என்பதாகும். இதன் பொருள் என்ன? கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அக்கால மக்கள் நடுவே ''ஆட்டுக்குட்டி'' என்பதற்கு ''அன்பார்ந்த குழந்தை'' என்றொரு பொருள் உண்டு. நாம் ''செல்லப் பிள்ளை'' என்பது இதைப் போன்றதுதான். இயேசு உண்மையிலேயே கடவுளின் அன்பார்ந்த மகன் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. ஆட்டுக்குட்டி யூதர்கள் நடுவே இன்னொரு சிறப்புப் பொருளையும் கொண்டிருந்தது. அதாவது, கோவிலில் பலி செலுத்துவதற்காகப் பயன்பட்ட சிறந்த பலிப்பொருள் ஆட்டுக்குட்டி. இயேசு இப்பெயரால் அழைக்கப்படுவது அவர் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார் என்பதைக் குறிக்கிறது.

ஆட்டுக்குட்டி பலியாக்கப்படுவது கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பை இறைஞ்சுவதற்காக. எனவே, இயேசு என்னும் ஆட்டுக்குட்டி பாவங்களைப் போக்குபவர் ஆவர். ஆக, யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதன் மூலம் இயேசு ஆற்றவிருந்த பணியைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிவிட்டார்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.