யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2022-01-16

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 62:1-5 ,பல்லவி: அனைத்து மக்களினங்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.! ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11 ,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-11 )
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

மாட்சிக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நம் ஆண்டவரின் மாட்சிமிகு செயல்களை நம் வாழ்வில் அனுபவிக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர் களாகிய நாம் அனைவரும் கடவுளின் மேன்மையை உணர்ந்து, அவரது மாட்சிமையில் பங்குபெறவே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உதவியைப் பெற்று மகிழ அன்னை மரியாவின் பரிந்துரை தேவை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. கானாவூர் திருமண நிகழ்ச்சியில் திராட்சை இரசம் தீர்ந்த பொழுது, மரியன்னையின் பரிந்துரையால் ஒரு புதுமை நிகழ்ந்ததைக் காண்கிறோம். நமது அன் றாடத் தேவைகளில் இறையன்னையின் பரிந்துரையை நாடி, இறைவனின் உதவிகளை சுவைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 62:1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்: எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்: மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்: ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 'கைவிடப்பட்டவள் ' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: 'பாழ்பட்டது ' என இனி உன் நாடு அழைக்கப்படாது: நீ 'எப்சிபா ' என்று அழைக்கப்படுவாய்: உன் நாடு 'பெயுலா ' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா: 96:1-3, 7-10
பல்லவி: அனைத்து மக்களினங்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.!

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடு ங்கள்: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: பல்லவி:

அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்:அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறி வியுங்கள். பல்லவி:

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவ ருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: பல்லவி:

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்: அவர் மக்களினங்களை நீதி வழு வாது தீர்ப்பிடுவார். பல்லவி:

இரண்டாம் வாசகம்

தூய ஆவியார்; தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11

சகோதரர் சகோதரிகளே, அருள்கொடைகள் பலவகையுண்டு: ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத் தொண்டுகளும் பலவகையுண்டு: ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு: ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்: அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடை யும்பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-11

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி இயேசுவின் தாய் அவரை நோக்கி, 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ' என்றார். இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே ' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், 'இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், 'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை: தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்: யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் தொடக்கமாம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றவர்களாய், திருச்சபையின் மக்களையும், உலக நாடுகளின் தலைவர்களையும் நிறை உண்மையின் பாதையில் வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம்.

அன்னை மரியாவை எங்கள் அனைவருக்கும் தாயாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். அந்த அன்னையைப் பின் பற்றி நாங்களும் ஏழை, எளியோர், ஓரங்கட்டப்பட்டோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய தரமும், அளவும் மிக்க ஒதுக்கீட்டைப் பெற உழைக்கத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாட்சியின் மன்னராம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடவும், கிறிஸ்தவ உண்மைகளைப் புறக்கணிக்க தூண்டும் தவறான வழிகாட்டுதல்களில் இருந்து விலகி நடக்கவும், உம் மாட்சிமையின் அரசை இம்மண்ணில் வரவேற்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புதுமைகளின் வேந்தராம் இறைவா,

உலகில் பணம், புகழ், பதவி போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு, நீதியையும், உண்மையையும் குழிதோண்டி புதைக்கும் தீயவர்கள் மனந்திரும்பவும், கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு தவறான விளக்கம் அளிக்கும் மதவெறியர்கள் உம்மைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளவும் புதுமை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா!

கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" !

கானாவூர் திருமணவிழா பற்றிய செய்தியைப் பலமுறை வாசித்து, சிந்தித்திருக்கிறோம். இன்று "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்னும் வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். திராட்சை இரசம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம், விருந்தின் அடையாளம், உறவின் அடையாளம். திராட்சை இரசம் தீர்வது என்பது அவமானத்தின் அடையாளமாக, உறவுச் சிக்கலின் அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அச்சிக்கலைத் தீர்க்க தம் மகனை அணுகினார் அன்னை மரியா.

நமது வாழ்வில், பணியில், குடும்பத்தில் "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதா?" என்று அவ்வப்போது நம்மைக் கண்காணித்துக்கொள்வது நல்லது. பல பணிகளில் பரபரப்பாக இருக்கும் பலரும், தங்களது நெருங்கிய உறவுகள் ஆழம் குறைந்துவருவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பணம் சேகரிப்பதிலே கவனம் செலுத்தும் இல்லத் தலைவன் மனைவி, பிள்ளைகளின் பாசம் குறைந்துவருவதைக் கவனிப்பதில்லை. பணியிலே நிறைவின்றி, மகிழ்ச்சியின்றி வேலைசெய்வது "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்பதைக் காட்டுகிறது. இன்றைய நாளில் நமது வாழ்வை, பணியை, உறவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கண்டால், மனங் கலங்காமல், அன்னை மரியாவை நாடுவோம். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமது வாழ்விலும் புதிய திராட்சை இரசம் என்னும் இனிமையை ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவார்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அன்னை மரியாவின் பரிந்துரையால், எங்கள் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்தி, திராட்சை இரசம் என்னும் மகிழ்ச்சி பொங்கி வழியச்செய்தருளும். அம்மா, மரியே, தாயே, எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்துபேசுவீராக, ஆமென்.