யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2021-12-25

கிறிஸ்து பிறப்பு திருவிழாத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் ஏசாயா நூலிலிருந்து வாசகம் 52:7-10,திருப்பாடல் 98: 1,2-3a,3cd-4,5-6,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-18)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இக்காலத்தில்; தம் மகன் வழியாக நம்மோடு பேசுகின்றார். நாம் செய்த அறச் செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தினால் கடவுள் நம்மை மீட்டார்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத் தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன, என்பது இயேசுவின் பிறப்பு நமக்குத் தரும் உறுதி மொழியாகும். இதுவே நமக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. இயேசுவின் பிறப்பு நம் ஒவ்வொருவருக்கும் எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகின்றது. விடுதலையும், மகிழ்வும், அமைதியும் அவரது பிறப்பின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் செல்வங்களாகும். இதற்காகவே மீட்பர் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். இந்த நற்செய்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோருக்கு நிறைவான மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருக்கும்.

இந்த அருள் உண்மைகளை நம் மனத்தில் ஆழமாகப் பதித்தவர்களாக, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, அவரை எப்பொழுதும் புகழ்ந்தேத்தவும், நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழவும் பணிபுரியவும் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் ஏசாயா நூலிலிருந்து வாசகம் 52:7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார்" என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையை கண்டனர்.
திருப்பாடல் 98: 1,2-3a,3cd-4,5-6

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. (பல்லவி)

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். (பல்லவி)

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். (பல்லவி)

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்றும், "நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்" என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலுயா, அல்லேலுயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள். பிற இனத்தரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்.ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்;மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்;" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக எம் மூதாதையரிடம் பேசிய இறைவனாகிய தந்தையே!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும் ஞானத்தையும், வலிமையையும் அளித்து நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், அவர்களுக்கு தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வியத்தகு செயல்களால் எம்மை வழிநடாத்தும் தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழவும், அமைதியின் தூதர்களாக வாழவும், செயற்படவும் தேவையான ஞானத்தை அளித்துக் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறியும் தந்தையே!

உலக நாடுகளில் அனைத்திலும் உண்மைக்காகவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும், உரிமை வாழ்வுக்காகவும், அன்புக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்களின் குறைகளைப் போக்கி நிறைவு செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இம் மகிழ்வின் காலத்தில் அவற்றை நாம் விரயமாக்காது, தேவையற்ற, ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிடாது பொறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும், ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா!

தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையும் வாழ்வுக் கொடுக்கும் இறங்கி வந்த எம் இறைவா

இன்று எம் உலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள், நல்லெண்ணங்கள், ஒருவர், மற்றவருக்கு உதவக்கூடிய பிறன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வு வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!

இந்த நல்ல நாளில் எமக்கு அடுத்திருப்போர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான அன்பும், ஆதரவும், அடைக்கலமும், பொருளாதர வசதிகளை செய்து தர வேண்டிய நல்ல மனதை தந்து இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவை அர்த்தமுள்ளதாய் கொண்டாட வேண்டிய வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நன்றி கூறுவோம் !

இன்று ஆண்டின் இறுதி நாள்! இறைவனுக்கு நன்றி கூறும் நாள். இந்த ஆண்டைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதன் நன்மைகளுக்காக, ஆசிர்வாதங்களுக்காக, வெற்றிகளுக்காக நன்றி கூறும் நாள். இந்த நாளில் ஆண்டு முழுவதும் நம்மை அரவணைத்த அன்பு இறைவனைப் போற்றுவோம். இந்த ஆண்டில் நாம் அடைந்த வளர்ச்சிகளுக்காக நன்றி கூறுவோம். இந்த ஆண்டின் தவறுகள், தோல்விகள், நோய்கள், இன்னல்களையும் நினைத்துப் பார்ப்போம். அவற்றிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது. எந்தத் தோல்வியிலிருந்தும், தவறிலிருந்தும் நாம் நன்மைகளை அடையலாம். முதலில், தவறுகளை, தோல்விகளை ஏற்றுக்கொள்வோம். தோல்வி என்பது யாருக்கும் நேர்வதுதான். அதில் தவறில்லை. தோல்வியிலேயே துவண்டுவிடுவதுதான் தவறு. அடுத்து, அந்தத் தோல்விகள், தவறுகள் ஏன் நிகழ்ந்தன என எண்ணிப்பார்ப்பதும், ஆய்வு செய்வதும் நன்று. இவையும் நமக்கு உதவும். மூன்றாவதாக, இனி இத்தகைய தோல்விகள், தவறுகள் நேராதபடி கவனமாயிருக்க உறுதி பூணுவோம். இந்த ஆண்டின் இறுதி நாளை மகிழ்ச்சியுடன் கழிப்போம்.

மன்றாட்டு:

தொடக்கமும், முடிவுமான இறைவா, இந்த ஆண்டின் இறுதி நாளில் நன்றியோடு உம்மைப் போற்றுகிறேன். இந்த ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டீரெ, உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம் தந்தீரே. வெற்றிகளும், பெருமைகளும், ஆசிகளும் தந்தீரே, உமக்கு நன்றி. இந்த ஆண்டில் நான் செய்த தவறுகள், செய்யத் தவறிய நன்மைகளுக்காக வருந்துகிறேன். மன்னியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.