யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் சனிக்கிழமை
2021-12-21

புனித பீட்டர் கனிசியுஸ்




முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: �விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.'' பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? �

நற்செய்தி வாசகம்

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், �பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

மெசியாவின் காலம் !

வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.

மன்றாட்டு:

உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.