இரண்டாவது திருவழிபாடு ஆண்டு திருவருகைக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை 2021-12-13
முதல் வாசகம்
யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17
அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது.
அவர் திருஉரையாகக் கூறியது: �பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.''
பிலயாம் திருஉரையாகக் கூறியது: �பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
திருப்பாடல் 25: 4-5. 6,7. 8-9
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?
நற்செய்தி வாசகம்
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27
அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, �எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, �நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.
யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?'' என்று அவர் கேட்டார்.
அவர்கள், � `விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், `பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். `மனிதரிடமிருந்து' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
எனவே அவர்கள் இயேசுவிடம், �எங்களுக்குத் தெரியாது'' என்று பதிலுரைத்தார்கள்.
அவரும் அவர்களிடம், �எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
மெசியாவின் காலம் !
வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.
மன்றாட்டு:
உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|