திருவழிபாடு ஆண்டு - C 2021-12-05
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9
,திருப்பாடல் 126: 1-2 4-5. 6 ,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 4-6, 8-11,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6
)
திருப்பலி முன்னுரை
நன்மைக்குரியவர்களே, திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்துவின் வருகைக்காக தயாரிக்கும் நாம், இன்று திருமுழுக்கு யோவானின் அழைப்பை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் வகையில், மனம்மாற வேண்டுமென யோவான் நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யும் வகையில், கோணலானவை அனைத்தும் நேராக்கப்பட வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் தூயவராக நிற்குமாறு, நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வாழ இன்றைய திரு வழிபாடு நம்மை அழைக்கிறது. ஆண்டவருக்காக நமது பாதையைச் செம்மையாக்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
கடவுள் உன் பேரொளியைக் காட்டுவார்.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9
எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்துகொள்; என்றும் உள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார்.
`நீதியில் ஊன்றிய அமைதி', `இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி' என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவுகூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார்.
பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னை விட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள்.
கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்து வரும்பொருட்டு, உயர்மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்.
மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.
திருப்பாடல் 126: 1-2 4-5. 6
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம். 2யb அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி
2 “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி
4 ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி
இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வாருங்கள்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 4-6, 8-11சகோதரர் சகோதரிகளே, உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.
மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.
அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.
“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.
இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
புனிதம் நிறைந்தவராம் இறைவா, உமது திருமகனின் வருகைக்காக உமக்காக வழியை ஆயத்தம் செய்பவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாகப் பொழிந்து, புனிதத்தில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நீதி நிறைந்தவராம் இறைவா, மக்களிடையே இரக்கமும், நீதியும், அன்புடன் கூடிய நற்செயல்களும் பெருக உழைக்கும் நல்ல மனதினை உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கம் நிறைந்தவராம் இறைவா, அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் மக்கள் மீது பரிவு கொண்டு, அவர்களது வேதனை நீங்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வாக்குமாறாத தெய்வமே! பல்வேறு தேவைகளுடன் இன்றைய திருப்பலியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் தாம் எதிர்நோக்கி காத்திருக்கும் காரியங்கள் நிறைவேற்றப்பட்டு வாக்குமாறாத தெய்வமாகிய உம்மேல் இன்னும் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, தன் விசுவாச வாழ்வை புதுப்பித்துக் கொள்ளும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா! வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நீதியின் ஒளியே எம் இறைவா! விசுவாசத்தில் நிலைத்திருக்கும் அனைவரும் இயேசுவின் உயிர்ப்பில் பங்குபெறுவர் என்று உணர்த்திய இறைவா! இறந்த விசுவாசிகளாகிய எங்கள் உறவினர்கள், நண்பர்கள், யாரும் நினையாத ஆன்மாக்கள் உமது நித்தய பேரின்பத்தை அடைந்து மகிழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மன உளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்துத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|