யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2021-11-28

திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு.

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33:14-16,பதிலுரைப்பாடல் திபா 25:4-5, 8-9, 10,14,கிறிஸ்துவின் வருகைக்கென்று திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:12-4:2,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

மேன்மைக்குரியவர்களே, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். மண்ணுலகில் நிலவும் குழப்பமும், விண்வெளியில் தோன்றும் அடையாளங்களும் ஆண்டவரின் வருகையை முன்னறிவிக்கும் என இயேசு முன்னறிவித்துள்ளார். நமது மீட்புக்காக நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33:14-16

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
பதிலுரைப்பாடல் திபா 25:4-5, 8-9, 10,14

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்@ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும் ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

ஆண்டவர் நல்லவர் நேர்மையுள்ளவர் ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் இவர் நடத்துகின்றார் எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.ஆண்டவரின் அன்புறவு அவருக்க அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும் அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
கிறிஸ்துவின் வருகைக்கென்று திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:12-4:2

சகோதர சகோதரிகளே, உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்: அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும் உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36

அக்காலத்தில் மானிடமகன் வலுகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது:"கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புனிதம் நிறைந்தவராம் இறைவா,

திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியான முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மேன்மை நிறைந்தவராம் இறைவா,

உம் திருமகனின் வருகைக்காக எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரத்தை, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவ ருக்கும் வழங்கி, உடல், உள்ள, ஆன்ம சுகத்தோடு பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம்:

யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றிப் புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா!

மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா!

தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மகிமை நிறைந்தவராம் இறைவா,

உமது மாட்சிக்கு எதிரான சிலை வழிபாடுகள் அனைத்தும் எம் நாட்டு மக்கள் நடுவில் இருந்து ஒழியவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே! எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம்.

உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது'' (லூக்கா 21:28)

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ''ஒத்தமை நற்செய்திநூல்களில்'' எருசலேமின் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று கலந்த விதத்தில் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: லூக் 21:20-28). எருசலேம் நகரம் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70) அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர்; எஞ்சியோர் பெருந்துன்பங்களுக்கு ஆளாயினர். அந்நிகழ்வுகளின் பின்னணியில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. வான மண்டலத்தில் அடையாளங்கள் தெரியும், கடல் கொந்தளிப்பு ஏற்படும்; மக்கள் தங்களுக்கு ஏற்படப் போகின்ற அழிவு குறித்து அஞ்சி நடுங்குவர் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால் இந்த அச்சுறுத்தும் அடையாளங்களின் நடுவே ஆறுதல் தரும் வார்த்தையும் உரைக்கப்படுகிறது. அதாவது, மானிட மகன் மாட்சியோடு வருவார்; மனிதரின் மீட்பு நிறைவுறும்.

மனிதர்கள் அச்சத்தால் நடுங்குகின்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆறுதல் செய்தி இது: ''நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' (லூக் 21:28). இவ்வாறு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிப்படையான காரணம் ''நமது மீட்பு நெருங்கி வருவது''தான். இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன? பண்டைக் காலத்தில் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது கடவுள் அவர்களுடைய ஏக்கமிகு மன்றாட்டுக்குச் செவிமடுத்தார். தம் மக்களின் வேதனையைப் போக்கிட அவர் முன்வந்தார். எனவே, இஸ்ரயேல் மக்கள் ''இடையில் கச்சை கட்டி'', ''கால்களில் காலணி அணிந்து'', ''கையில் கோல்பிடித்து'' பாஸ்கா உணவை உண்ணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர் (காண்க: விப 12:11). இவ்வாறு, பயணம் போகத் தயாரான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கடவுளின் வல்லமையால் அவர்கள் விடுதலையும் மீட்பும் அடைந்தார்கள். இயேசுவும் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார். உலகம் என்று முடிவுக்கு வரும் எனத் தெரியா நிலையிலும் நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க இயேசு நம்மை நோக்கித் ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' எனக் கேட்கின்றார் (லூக் 21:28). நமக்குக் கடவுள் வழங்குகின்ற மீட்பு நம்மை நெருங்கி வந்துவிட்டது என்னும் நல்ல செய்தி நமக்கு மகிழ்ச்சி தர வேண்டும். உலக அழிவு பற்றி அச்சமுறாமல் நாம் ''தலைநிமிர்ந்து நின்று'', நம் கடவுளிடமிருந்து வருகின்ற மீட்பை நன்றியோடு ஏற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, அழிவுச் சக்திகளைக் கண்டு அஞ்சாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.