முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 34வது வாரம் வியாழக்கிழமை 2021-11-25
முதல் வாசகம்
விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!''
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27
அந்நாள்களில் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, ``அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?'' என்றார்கள். அதற்கு அரசன், ``ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே'' என்றான். உடனே அவர்கள் அரசனை நோக்கி, ``யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்'' என்றார்கள். ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான். ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, ``அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்'' என்றனர். ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டு வரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, ``நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!'' என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்திரையிட்டான். பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டு அகன்றது. பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, ``தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?'' என்று உரக்கக் கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், ``அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே'' என்று மறுமொழி கொடுத்தார். எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும் நாட்டினருக்கும் மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தான். ``உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
தானி (இ) 1: 45. 46-47. 48-49. 50-51
45 பனித் திவலைகளே, பனி மழையே,
ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி
46 பனிக் கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
47 உறை பனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி
48 இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
49 ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி
50 மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
51 மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக. -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
துன்பங்கள் சான்று பகரும் வாய்ப்புகள் !
துன்பமே இல்லாத சொகுசான ஒரு வாழ்வை இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக, தம்மைப் பின்பற்றுவோருக்குத் துன்பம் உண்டு என்றே தெளிவாகப் போதி;த்தார். ஆனால், அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலும், அந்தத் துன்பங்களின் இறுதியில் வெற்றியும் தருவாதாக வாக்களித்தார். இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள் என்று இன்றைய நற்செய்தி வாசகம் எச்சரிக்கிறது. எனக்கு சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் இயேசு கூறுகிறார். அத்துடன், முன்னதாகவே கவலைப்பட வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார். எனவே, நம் வாழ்வில் நாம் சந்திக்கும் தோல்விகள், நோய்கள், அவமானங்கள், துன்பங்கள்... இவற்றைக் கண்டு நாம் கலங்க வேண்டாம். இவையெல்லாம் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதைக் காட்ட நமக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாம் சான்று பகர்வோம். புலம்பாமல், குறை கூறாமல், தாழ்வு மனம் கொள்ளாமல், செப வாழ்வை நிறுத்தி விடாமல், நம்பிக்கையை இழந்துவிடாமல் நாம் வாழும்போது, அதுவே நமது சாட்சிய வாழ்வு. எனவே, துன்பத்தைத் தேடி ஓட வேண்டாம். ஆனால், துன்பங்கள் வரும்போது கலங்காமல், வாய்ப்புகளாகப் பார்ப்போம்.
மன்றாட்டு:
எங்கள் துயரத்தையெல்லாம் களிநடமாக மாற்றுவதாக வாக்களித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். துன்பங்கள் சான்று பகரும் வாய்ப்புகள் என்று மொழிந்தீரே, உமக்கு நன்றி. கவலைப்படாதீர்கள் என்று சொன்னீரே, உமக்குப் புகழ். துன்ப வேளைகளில் சான்று பகரும் மனநிலையை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|