முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 34வது வாரம் திங்கட்கிழமை 2021-11-22
முதல் வாசகம்
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20
யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.
அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
அரசன் தான் உண்டு வந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.
இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள். அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகி வந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார். அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.
அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, ``உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்'' என்றான்.
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது: ``ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்கு தண்ணீரையும் மட்டுமே தாரும். அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பாரும்; அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்'' என்றார்.
அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான். பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது.
ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ண வேண்டிய சிறப்புணவுக்கும் பருக வேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான். கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார். அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான். அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.
ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவ
தானி(இ) 1: 29. 30-31. 32-33
29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. 29உ மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி
30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி
32 உமது ஆட்சிக்குரிய அரியணை மீது நீர் வாழ்த்தப் பெறுவீராக. 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 24:42a,44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4
அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
அவர், ``இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
நிறைவு தரும் ஆட்சி
அரசனின் கடமை தன் ஆளுகைக்குட்பட்ட மக்களை குறையின்றி பேணி காப்பது. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்." ஆகவே, காத்தல் அரசனின் சிறப்புப் பண்பு. எனவேதான் படை வீரர், "நீ ய+தர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" (லூக் 23'37) என்கின்றனர். குற்றவாளிகளுள் ஒருவனும், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று கோரிக்கை வைக்கிறான்.
இந்த காப்பாற்றும் பண்பு நம் இறைவனில் நிறைவாக உள்ளதை விவிலியம் முழுவதும் காண்கிறோம். இன்னும் சிறப்பாக ஏழைகள், பாதிக்கப்பட்டோர்,துன்புறுவோர்,பாவிகள் இவர்களை அவர் காக்கும் விதமே அலாதியானது. "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்."(மத் 5'45) "இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்."(எசாயா 49 :16)"அவர் உம் கால் இடறாதபடி பாhத்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்."(தி.பா 121 :3); "நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்." (தி.பா121'8) ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."( யோவா 10 :11) "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்." ( எசா 53 :4) நம் இறைவன் காக்கும் தன் உயிர் கொடுத்து காக்கும் தெய்வம். உண்மை அரசர். அவரது அரசின் மக்களாயிருப்பது நமக்குப் பெருமை. அவரை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தி வாழ்வோம். அவரது அரசில் வாழும் நமக்கு குறை இருக்காது.எல்லாம் நிறைவாக இருக்கும்.
மன்றாட்டு:
நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும்.
|