யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-11-21

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். 7:13-14,பதிலுரைப்பாடல்: திருப்பாடல்: 16: 5,8, 9-10. 11,திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 1:5-8,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்புக்குரியவர்களே! இன்று தாய் திருச்சபையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. உண்மைக்கு சாட்சியம் கூறுவதே என் பணி, வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைமகன் இயேசுவின் கூற்று அவரது பணி வாழ்வில் நிறைவேறியது. இவ்வுலகில் எத்தனை அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன ஆனால் ஒன்றுகூட நிலையான அரசு இல்லை, காரணம் உண்மை இல்லை. இயேசு இவ்வுலகிற்கு கொண்டு வந்த அரசு நிலையான அரசு. அந்த நிலையான அரசின் மக்களாக வாழ வேண்டுமென்றால நம்மிடம் உண்மை இருக்க வேண்டும். நல்ல ஆயனாகிய இயேசுவின் மக்களாக நாம் வாழ அருள் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

மானிட மகனின் ஆட்சியுரிமை என்றுமுளதாகும்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். 7:13-14

அந்நாட்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்!
பதிலுரைப்பாடல்: திருப்பாடல்: 16: 5,8, 9-10. 11

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்: ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்: பல்லவி

பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்: அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது: நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை: ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 1:5-8

இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி: இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்: மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை ஆமென்! "அகரமும் னகரமும் நானே " என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே..

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

அக்காலத்தில், பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், "நீ யூதரின் அரசனா? " என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? " என்று கேட்டார்.அதற்கு பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? " என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல " என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ? " என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்: இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபையின் ஆயரே இறைவா,

உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம்.

உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம்:

கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றிப் புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா!

மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா!

தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியின் இறைவா!

எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே! எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம்.

உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37)

வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆங்கில ஆண்டு மாதங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஆண்டின் தொடக்கம் ஜனவரி மாதம். நிறைவு டிசம்பர் மாதம். இதே போல, திருச்சபையில் வழிபாட்டு ஆண்டு இருக்கிறது. இதனை காலங்களாகப் பிரிக்கிறார்கள். திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் மற்றும் பாஸ்கா காலம். வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் திருவருகைக்காலம். நிறைவு வாரம், கிறிஸ்து அரசர் பெருவிழா வாரம். இதுதான் பொதுக்காலத்தின் நிறைவாகவும், வழிபாட்டு ஆண்டின் கடைசி வாரமாகவும் இருக்கிறது. எதற்காக கிறிஸ்து அரசர் பெருவிழா, திருவழிபாட்டு ஆண்டின் கடைசி வாரத்தில் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்துவின் மகிமையை திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இதற்கு காரணம். அதேபோல, திருவருகைக்காலங்களில் சுட்டிக்காட்டப்படும் இயேசுவின் வருகை மற்றும் உலகத்தின் இறுதிநாட்கள் போன்றவற்றையும், இதில் நாம் சிறப்பாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இறைவன் தான் நமக்கு என்றும் அரசர், அவருக்கே என்றென்றும் மகிமையும், ஆராதனையும், புகழ்ச்சியும் என்பதை உறுதிப்படுத்த வந்த விழா தான், இந்த கிறிஸ்து அரசர் பெருவிழா. இஸ்ரயேல் மக்களுக்கு, யாவே இறைவனைத்தவிர வேறு யாரும் அரசர் கிடையாது. அவர்களை ஏற்றுக்கொள்வதும் கிடையாது. இறைவன் ஒருவரே அரசர். அவரைத்தவிர வேறு யாரையும், அந்த இடத்தில் வைப்பது கிடையாது. அதே போல, இந்த விண்ணகம் மற்றும் மண்ணகத்தின் அரசர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் சாவையே வெற்றி கொண்டு நமக்கெல்லாம் வாழ்வு கொடுத்தவர். அந்த வாழ்வை நமக்குக் கொண்டு வந்து, மீட்பராக, அரசராக இந்த வரலாற்றிலும் அவர் நிலைகொண்டிருக்கிறார்.

நாம் அனைவருமே அவரால் வாழ்வு பெற்றுள்ளோம். அவரது தியாகத்தால் மீட்பு பெற்றுள்ளோம். அந்த வாழ்வுக்கு தன்னையே அவர் தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் விலையாகக் கொடுத்தார். அத்தகைய அரசரை பெற்றுள்ள நாமும், நமது வாழ்வில், மற்றவர்களுக்காக, நம்மையே இழக்க முன்வருவதற்கு, இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது.

மன்றாட்டு:

எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருள்தாரும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.