யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் சனிக்கிழமை
2021-11-20

புனித கிளமென்ட்
முதல் வாசகம்

எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13

அந்நாள்களில் அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது, பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளி ஆகியவற்றுக்குப் புகழ் பெற்றது என்று கேள்விப்பட்டான். அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும் கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர் அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக் கவசங்களும் படைக்கலன்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான். எனவே அந்தியோக்கு புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்; ஆனால், முடியவில்லை; ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள். ஆகவே அவன் பின்வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான். யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்ட செய்தியை அவன் பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்; ``லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று யூதர்கள் முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்; முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள், மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமைமிக்கவர்கள் ஆனார்கள்; எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்; திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்; அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்'' என்றும் எடுத்துரைத்தார். இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்ட வண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான். கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான். ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, ``என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது. `எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக் கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன். இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்'' என்று கூறினான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.
திருப்பாடல்கள் 9: 1-2. 3,5. 15,1

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். பல்லவி

3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள். 5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். பல்லவி

15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. 18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40

அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, ``போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம், ``இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே'' என்றார். மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, ``போதகரே, நன்றாகச் சொன்னீர்'' என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''சதுசேயர் இயேசுவிடம், 'உயிர்த்தெழும்போது அவர் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?' என்று கேட்டனர்'' (லூக்கா 20:33)

இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர். சில வேளைகளில் அவர்கள் நல்ல எண்ணத்தோடு கேள்விகள் கேட்டார்கள். அக்கேள்விகளுக்கு இயேசு பொருத்தமான பதிலளித்தார். ஆனால் வேறு சில வேளைகளில் சிலர் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்கத்துடன் கேள்வி கேட்டனர். இத்தகைய கேள்விகளில் ஒன்று ''உயிர்த்தெழுதல்'' பற்றியது. இக்கேள்வியைக் கேட்டவர்கள் சதுசேயர்கள். இவர்கள் பரிசேயருக்கு எதிரான குழுவினர். பரிசேயர் தொழுகைக் கூடங்களை ஆதரித்தவர்கள். ஆனால் சதுசேயரோ எருசலேம் நகரில் அமைந்த கோவிலில் மட்டுமே கடவுளுக்கு வழிபாடு நடத்தப்பட வேண்டும் என வாதாடினார்கள். அவர்கள் விவிலியத்தில் ஏற்றுக்கொண்ட நூல்கள் ''தோரா'' என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்து நூல்கள் மட்டுமே. மேலும், சதுசேயர் சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்னும் உண்மையை மறுத்தனர். இயேசுவிடம் அவர்கள் கேட்ட கேள்வி நமக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் அன்றைய யூத வழக்கப் பின்னணியில் அக்கேள்வியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவருடைய கொழுந்தனே அப்பெண்ணை மனைவியாக ஏற்றுத் தம் சகோதரருக்கு வழிமரபு உண்டாக்க வேண்டும் என்பது மோசே வழங்கிய சட்டம். அது இணைச் சட்டம் என்னும் விவிலிய நூலில் உள்ளது (காண்க: இச 25:5-6). இவ்வாறு ஏழு சகோதரர்களை ஒருவர்பின் ஒருவராக மணந்த பெண் ''உயிர்த்தெழும்போது யாருக்கு மனைவி ஆவார்?'' (லூக் 20:33) என்பது சதுசேயர் எழுப்பிய தந்திரக் கேள்வி.

இக்கேள்விக்கு இயேசு அளித்த பதிலில் இரு பகுதிகள் உள்ளன. முதலில் இயேசு ''உயிர்த்தெழுவோர் பெறும் வாழ்வு'' எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குகிறார். பின்னர், சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்பதற்கு விவிலிய ஆதாரம் வழங்குகிறார். விண்ணக வாழ்வு இம்மண்ணக வாழ்வின் பிரதிபலிப்பாக இராது. மாறாக, மனிதர் ஒரு புதிய நிலை அடைவார்கள். எனவே, இவ்வுலக வழக்கங்கள் போலவே மறுவுலகிலும் இருக்கும் என நினைப்பது சரியல்ல. மனிதருக்கு உயிரளிக்கின்ற கடவுள் அந்த உயிர் முற்றிலுமாக மறைந்துவிடுவதை விரும்பவில்லை. ''வாழ்வோரின் கடவுளாக'' விளங்கும் இறைவன் நமக்கு வாழ்வளிக்க விரும்புகிறார். எனவே, சாவுக்குப் பின் ஒரு புதிய வாழ்வு நிலையை நாம் பெறுவோமே ஒழிய, நாம் அழிந்துபடுவதில்லை. இம்மண்ணகத்தில் கடவுள் நமக்கு வழங்குகின்ற உயிர் அவர் தருகின்ற கொடை. அதுபோலவே, நிலை வாழ்வை வழங்கும் கடவுள் நமக்குத் தம்மையே கொடையாக அளிக்கின்றார். எந்நாளும் வாழ்கின்றவர் கடவுள் என்பதால் நாமும் நிலை வாழ்வில் பங்கேற்போம். அதற்கு ஒரே வழி நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்வதுதான்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு வாழ்வளிப்பவர் நீரே என உணர்ந்து நாங்கள் செயல்பட அருள்தாரும்.