திருவழிபாடு ஆண்டு - B 2021-11-14
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3,திருப்பாடல்16: 5,8. 9-10. 11,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32)
திருப்பலி முன்னுரை
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நிறைவான மகிழ்வை நமக்களிக்கும் நம் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். கிறீஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய உண்மைகள் இன்றைய செய்தியாக நமக்குத் தரப்படுகின்றது. அவருடைய வருகை எப்படி இருக்கும், அது உருவாக்கும் விளைவுகள் என்ன, நாம் கிறிஸ்துவின் வருகையை எப்படி எதிர் கொள்ளவேண்டும், என்பது பற்றி தெளிவான உண்மைகள் இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.
இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொலியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர் என்னும் இறைவார்த்தைகள் நம்மை ஆழமான ஒரு ஆன்மிகச் சுத்திகரிப்பை மேற்கொள்ளத் துண்டுகின்றன.
இந்த உண்மைகளை இதயத்தில் நன்கு பதித்து, முடிவில்லா வாழ்வைப் பெற்றிட, இறைவனுக்குகந்த மக்களாக மாறி அவர் காட்டும் நெறிமுறைகளின்படி வாழ இத்திருப்பலியில் அருள் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3
அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றம் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
திருப்பாடல்16: 5,8. 9-10. 11
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி
9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி
இரண்டாம் வாசகம் ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு கூறியது: அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. "ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வருகையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். முதல் முறை வந்து எங்களை மீட்டவரே, உமக்கு நன்றி. இரண்டாம் முறை உலகிற்குத் தீர்ப்பு அளிக்க இருப்பவரே, உமக்குப் புகழ். ஆண்டவரே, எல்லாக் காலத்திலும், எல்லா வேளையிலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி, எங்கள் மரணத்துக்கு, உமது இரண்டாம் வருகைக்கு எப்போதும் தயாராக இருக்கும் அருளைத் தந்து உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மறுமை வாழ்விற்கு அழைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து இறை ஊழியர்களுக்காகவும் மன்றாடுவோம். வல்ல பரம்பொருளே - வானகத் தந்தையே - எம் இறைவா! விசுவாசிகளின் மந்தையாகிய திருச்சபையில் மேய்ப்புப் பணிக்கு தங்களை அர்ப்பணித்ததோடு, வலுவிழந்தவற்றைத் தேற்றவும், வலிமை கொண்டவற்றைக் கண்காணிக்கவும் செய்து, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை ஏற்றமுற நிறைவேற்றி, குறிக்கப்பட்ட காலத்தில் உம்மால் அழைத்துக் கொள்ளப்பட்டவர்களான எங்கள் திருத்தந்தையர்கள், ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் மற்றுமுள்ள துறவறத்தார்கள் உம்மோடும், உடனுள்ள அனைத்துப் புனிதர்களோடும் வானகப் பந்தியில் இடம் பெறும் வரம் வேண்டி, இறைவா! இன்று உம்மை மன்றாடுகிறோம்.
இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம்: கருணைத் திருவுருவே - காத்து நிற்கும் பேரருளே - எம் இறைவா! நரை திரை பருவங்களில் நலிவுற்று மரித்தவர்கள் - பிணிகளின் தாக்கத்தால் நம்மைப் பிரிந்து சென்றிருப்பவர்கள் எதிர்பாரா விபத்திற்கு இலக்காகி இறந்தவர்கள் - இத்தகு விசுவாசிகள் இறை இரக்கத்திற்கு உள்ளாகவும், இவர்களை வான்வீடு வரவேற்றுக் கொள்ளவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா! இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீதியின் இறைவா! எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம்.
உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!
எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது'' (மாற்கு 13:32)
நிறைவுக் காலம் பற்றி இயேசு தம் சீடர்களுக்கு எடுத்துக் கூறினார். கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். நிறைவுக் காலம் எப்போது நிகழும் என்னும் கேள்விக்குப் பதில் தராததால் இயேசுவிடம் குறை நிலவியது என நாம் முடிவுசெய்யலாமா? இயேசு பாவம் தவிர மற்று அனைத்திலும் நம்மைப் போல் ஒருவரானார் என்பது உண்மையென்றால் மனிதப் பண்பில் அவர் முழுமையாகப் பங்கேற்றார் என்பதே பொருள் (காண்க: எபி 4:15). இயேசு நம்மோடு தம்மையே முற்றிலுமாக ஒன்றித்துக் கொண்டதால் அவர் நம் நிலையைத் தமதாக்கினார். அதை ஒரு விதத்தில் இறைநிலைக்கு உயர்த்தினார்.
என்றாலும் அவர் அறியாதவை இருந்தன என்று ஏற்றுக்கொள்ள நாம் தயங்கக் கூடும். மனிதர் என்னும் முறையில் அவர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் இறைஞானமும் அறிவும் கொண்டவராக இருந்தாலும் உண்மையிலேயே மனிதராகவும் இருப்பதால் நம்மைப் போல அவரும் அறிவில் வளர்ந்தார். எப்போது நிறைவுக் காலம் வரும் என்பதற்கு இயேசு தரும் பதில் என்ன? நம் வாழ்வில் எந்த நேரத்திலும் இறுதிக் காலம் வரலாம். அது நாம் சாகும் தருணமாக அமையும் என்பது ஒரு பொருள். அதேபோல, நம் தலைமுறையும் தொடர்ந்து பல தலைமுறைகளும் மறைந்துபோகும் என்பது வரலாற்று நியதி. ஆனால் இன்று உயிர்வாழ்கின்ற நாம் இயேசு தொடங்கிவைத்த இறையாட்சி நம்மிடையே உள்ளது என்னும் உணர்வோடு வாழ அழைக்கப்படுகிறோம். வானமும் வானத்துக் கோள்களும் அதிர்ந்து, இடம் பெயர்ந்தாலும் அந்த அதிர்ச்சி நம் உள்ளத்தில் எதிரொலிப்பதுதான். அங்கே நாம் கடவுளைச் சந்திக்கின்றோம். நம்மை நிலை வாழ்வுக்கு அழைக்கும் நம் கடவுள் தமக்கே உரிய காலத்தில், விதத்தில் நம்மை மாட்சிமைப்படுத்துவார் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாது.
மன்றாட்டு:
இறைவா, நிறைவு நோக்கி எங்களை நீர் வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
|