யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் சனிக்கிழமை
2021-11-13

புனித மார்கரீத்
முதல் வாசகம்

தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது. உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
திருப்பாடல்கள் 105: 2-3. 36-37. 42-43

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! -பல்லவி

36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. -பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின் ஆண்டவர் அவர்களிடம், நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

மனந் தளராமல் செபிப்போம் !

இடைவிடாது, மனந்தளராது செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான உவமையை இன்று வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின் தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம் கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்? இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக் குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத் தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர் (34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில் ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும். பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக் குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது. எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ் பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.

மன்றாட்டு:

புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.