யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-11-12
முதல் வாசகம்

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள். அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார். அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம். இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும். அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்; ஏனெனில் அவை அழகாக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது! உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்தபோதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்தும்.
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள் வாங்கினார்கள், விற்றார்கள் நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர். நான் உங்களுக்குச் சொல்கிறேன் அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். அவர்கள் இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, இது எங்கே நிகழும்? என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும் என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு 'இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது' என்றார்'' (லூக்கா 17:21)

இறையாட்சி பற்றி இயேசு போதித்துக் கொண்டே எருசலேமை நோக்கிப் பயணம் செய்தார் என்பதை லூக்கா நற்செய்தி விளக்குகிறது. ஆனால் இறையாட்சி எப்போது வரும் என்று அறிய மக்கள் விரும்பினர். அவர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கு வியப்பாக இருக்கலாம். அதாவது, இறையாட்சி எப்போது வரும் என்று நாளும் நேரமும் குறித்துப் பதில்கூற இயேசு மறுத்துவிட்டார். கடவுள் இயேசுவின் வழியாகத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு மக்களுக்குப் பல அடையாளங்கள் வழி உணர்த்தினார். எனவே இயேசுவில், அவருடைய அதிசய செயல்களில், அவருடைய போதனையில் இறையாட்சி ஏற்கெனவே விடியத் தொடங்கிவிட்டது. இதைக் குறிக்கும் விதத்தில்தான் இயேசு ''இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது'' என்று பதிலிறுத்தார். இதிலிருந்து இறையாட்சி என்றால் மனிதரின் உள்ளத்தில் மட்டுமே தனித்தனியாகச் செயல்படும் என நாம் முடிவுகட்டிவிடலாகாது. இயேசுவின் வாழ்வில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்பதை உணர்வோர் ஏற்கெனவே இறையாட்சி அனுபவத்தைப் பெற்றனர்.

கடவுளோடு நல்லுறவு கொள்வதும், பிற மனிதரை மதித்து அவர்களை அன்புசெய்வதும் இறையாட்சியின் அடையாளங்கள். எங்கே அன்புக் கட்டளை செயலாக்கம் பெறுகிறதோ அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது என நாம் உறுதியாகக் கூறலாம். ஆயினும் இறையாட்சியின் முழுமை எப்போது வரும் என்பதை நாளும் நேரமும் குறித்துச் சொல்ல இயேசு மறுத்துவிட்டார். சில கிறிஸ்தவர்கள் ''கடைசிக் காலம்'' இன்று வரப்போகிறது, நாளை வரப்போகிறது என்று தவறாகக் கருதுவதுண்டு. இது இயேசுவின் போதனைக்கு முரணாக உள்ளது. கடவுளின் அரசு இவ்வுலகில் ஏற்கெனவே வரத் தொடங்கிவிட்டது என்பதை நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையும் போதனையும் சாவும் உயிர்த்தெழுதலும் நமக்கு இந்த உறுதிப்பாட்டைத் தருகின்றன. ஆனால் உலக முடிவு என்று வருமோ என்னும் அச்சம் நம் உள்ளத்தை ஆட்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேளையில் இறுதிக் காலம் வந்தாலும் சரி, நாம் கடவுளின் ஆட்சியில் முழுமையாகப் பங்கேற்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கவேண்டும். அப்போது இறையாட்சி எப்போது வரும் கேட்காமல் இறையாட்சியில் இப்போதே பங்கேற்கும் முறை என்னும் கேள்வியை நாம் எழுப்புவோம். அதற்கு இயேசு தருகின்ற பதில்தான் நாம் அன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது.

மன்றாட்டு:

இறைவா, நாளை என்ன நிகழுமோ என்னும் கவலையில் நாங்கள் அழுந்திவிடாமல் இன்று எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நடந்திட அருள்தாரும்.