யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் வியாழக்கிழமை
2021-11-04




முதல் வாசகம்

வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-12

சகோதரர் சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா? ஏனெனில், ``ஆண்டவர் சொல்கிறார்: நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும், நாவு அனைத்தும் என்னைப் போற்றும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.
திருப்பாடல்கள் 27: 1. 4. 13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் காணாமல் போன ஆடல்லவா !

காணாமல் போன ஆடு, காணாமல் போன நாணயம் என்னும் இரண்டு அருமையான உவமைகளை இன்று வாசிக்கிறோம். எதையாவது தொலைந்துபோன அனுபவம் உள்ளவர்களுக்குத்தான், தொலைந்ததைக் கண்டுபிடிக்கும்போது உண்டாகும் பெருமகிழ்ச்சியின் பரிமாணம் புரியும். ஆடு ஒன்றை இழந்த மனிதன் காடு, மேடெல்லாம் அலைந்து அதைத் தேடுகிறான். கண்டுபிடித்ததும், அதைத் தோள்மேல் போட்டுக்கொண்டு, அயலாரோடும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். அதுபோலத்தான், திராக்மாவை இழந்த பெண்ணும் அதைத் தேடிக் கண்டதும், மகிழ்ந்து, தன் தோழியரோடு அதைக் கொண்டாடுகிறாள். அவ்வாறே, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் ஆண்டவர். ஒப்புரவு அருள்சாதனத்தில் கலந்துகொண்டு, பாவங்களை அறிக்கையிட்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பாவ அறிக்கை செய்யும்போது நமக்கு மட்டும் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. வானதூதர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்னும் இயேசுவின் செய்தி நமக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் ஆண்டவரே, நான் பாவி, என்னை மன்னியும் என்று நாம் அறி;க்கையிடும்போதெல்லாம். விண்ணகத் தூதரிடையே நாம் மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை உண்டாக்குகிறோம். இதை மனதில் கொண்டு, பாவ அறிக்கை செய்வோமா? வான்தூதருக்கு மகிழ்ச்சியைத் தருவோமா!

மன்றாட்டு:

மன்னிப்பின் நாயகனே இறைவா, மனமாற்றம் என்னும் இனிய கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பாவி என்று ஏற்று, உம்மிடம் திரும்பி வருகின்றபொழுது, வானகத் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாவதற்காக உம்மைப் போற்றுகிறேன். அந்த மன்னிப்பின், மனமாற்றத்தின் அனுபவத்தை எனக்க எப்போதும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.