யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
2021-11-01

புனிதர் அனைவர் பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டி லிருந்து வாசகம் 7: 2-4, 9-14,திருப்பாடல்கள் 24: 1-2. 3-4. 5-6 ,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3,+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று அனைத்து புனிதர்களின் பெருவிழாவை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள். அனைத்து புனிதர்களின் பெருவிழாவை திருச்சபை கொண்டாடும் இந்நாளில் புனிதர்களின் நாமம் தாங்கிய ஒவ்வொருவருக்கும் நாம விழா நல்வாழ்த்துக்கள்.

“புனிதர்கள் யார்? ” என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில், “ புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்.” என்பதுவே. ஆம். புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. இறைமகன் இன்றைய நற்செய்தியில் போதித்தவை அனைத்தும் “நான் எதற்காக வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப் பின்பற்ற விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ வேண்டுமென்பதையும்” மிகத் தெளிவாக கூறுகின்றார். இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று நாம் போற்றிக் கொண்டாடும் புனிதர்கள். ஆகவே கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டிய மற்றும் அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிய, புனிதர்களின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்திட அருள் வேண்டி, இத்தெய்வீகத் திருப்பலியில் இணைந்திடுவோம்.



முதல் வாசகம்

பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டி லிருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, ``எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்'' என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், ``அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது'' என்று உரத்த குரலில் பாடினார்கள். அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். ``ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்'' என்று பாடினார்கள். மூப்பர்களுள் ஒருவர், ``வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?'' என்று என்னை வினவினார். நான் அவரிடம், ``என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்'' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: ``இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல்கள் 24: 1-2. 3-4. 5-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புனிதர்களின் பேரின்பமே இறைவா,

தங்கள் வாழ்வில் உம்மை மாட்சிப்படுத்தி, இன்று உம்மோடு வாழும் பேறுபெற்ற அனைத்துப் புனிதர்களுக்காகவும். அவர்களுக்கு நீர் அளித்த மாட்சியின் மணிமுடிக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். இறைவா, எங்கள் வானகத் தந்தையாகிய நீர் தூயவராய், இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல. நாங்களும் வாழவும், அதன்வழி புனிதர்களாய் மாறவும் அருள்பொழிய வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

எம் இறைவா!

நீரோடைகளை வாஞ்சித்து தேடும் கலைமான்களிலும் மேலாக உம்மை நேசித்ததாலும் - வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை ஆழ்ந்து தியானிப்பதில் அகமகிழ்வு கொண்டதாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் இறை ஞானத்திலும், இறையன்பிலும் நாங்கள் மென்மேலும் வளரும் வரம் வேண்டி இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

“என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன், நான் உன்மேல் அன்பு கூர்கிறேன்” என்ற இறைவா,

இந்த உலகம் பிறர் வாழ்வை எப்போதும் விமர்சனம் செய்து, குறை கூறி அவர்களின் திறமைகள், ஆற்றல்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது, கீழே வீழ்த்த முற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் விமர்சனங்கள், ஏற்றுக் கொள்ளாத நிலையில் மனம் சோர்ந்து, தளர்ந்திடாது, திறமைகள், உழைப்பை முடக்கி விடாது, எத்தகைய நிலையிலும் முன்னேற்றப் பாதையிலிருந்து விலகிடாது, அவர்களின் தரமற்ற விமர்சனங்களை புறம் தள்ளி, இந்த உலகம் ஒதுக்கினாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாங்கள் உமது பார்வையில் மதிப்புக்குரியவர்களாக இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த நிறைவுடன், வாழ்வின் கடமைகளை, பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றக்கூடிய, இலட்சியங்களில் தொடர்ந்து பயணிக்கக்கூடிய திடமான, வலிமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

‘தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்” என்ற இறைவா,

வாழ்வில் ஆதரவற்று, துணையின்றி, ஆறுதலின்றி தவிக்கும் மாந்தர்களை, அவர்களின் மனத் துயரை, மனப்பாரங்களை, கண்ணீரை கண்ணோக்கும். அவர்களின் மனத்துயரை மாற்றிட, உடனிருந்து ஆறுதல், அன்பை அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைத் தேற்றி, அவர்கள் வாழ்வு ஏற்றம் கண்டிடும் வகையில், அவர்கள் மகிழ்வில் உம்மைக் காணும் மாந்தர்களாக நாங்கள் வாழ்ந்திடக் கூடிய, நல் இதயத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா!

தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்” என்ற இறைவா,

முப்பத்தெட்டு ஆண்டுகளாக குளத்தில் இறக்கிவிட ஆளின்றி, எத்துணை பொறுமையோடு காத்திருந்திருந்த, மனிதருக்கு நீர் சுகம் தந்து வாழ்வு கொடுத்தீர், பதினெட்டு ஆண்டுகளாக தீய ஆவி பிடித்து, கூன் விழுந்து உடல்நலம் குன்றிய பெண்ணைக் குணப்படுத்தினீர். இவர்களின் பொறுமை இன்று எங்களிடம் காணாமற் போய்விட்டது. இன்று மாந்தர்களிடம் இல்லாத ஒரு “மை”யாக பொறுமை வலம் வருகிறது. எதையும் காத்திருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு, பொறுமையில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடன் வாழும் மாந்தரிடமும், பணித்தளத்திலும், எங்கள் விசுவாச வாழ்விலும் பொறுமையிழந்து, எரிச்சல்பட்டு, நிம்மதியின்றி வாழும் மனநிலையை மாற்றி, பொறுமை என்னும் உன்னத பண்பினைப் பெற்று, வாழ்ந்திட, வரமருள, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒரு சொல் ஒரு கொடையை விட மேலானது” என்ற இறைவா,

நாங்கள் பேசுகின்ற வார்த்தைகள், பலரை காயப்படுத்துவதாக, வீழ்த்துவதாக, கண்ணீரில் ஆழ்த்துவதாக அமையாமல், பலரும் பயன்பெறக்கூடிய பண்பான, கனிவான, ஊக்கம் தரக்கூடியதான வார்த்தைகளாக அமைந்திடவும், எங்கள் வீண் வார்த்தை ஒவ்வொன்றுக்கும் நாங்கள் கணக்கு கொடுக்கும் வேண்டுமென்பதை உணர்ந்தவர்களாக, தவறான வார்ததைகளை பேசாமல், எங்கள் நாவைக் காத்துக் கொள்ளவும், இனிய சொற்களால், பல இதயங்களை இதமாக்கி, இன்பத்தை கொடுக்கவும், தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும், எங்கள் நாவினை பயன்படுத்திட ஆற்றல் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உண்மை நெறியைக் கற்பிக்கும் தந்தையே இறைவா!

எமது பிள்ளைகள் அனைவரும் தீமையின் பிடியில் சிக்கிவிடாமலும், ஆன்மிக வாழ்விலிருந்து விலகிவிடாமலும் இருக்க அவர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு வேண்டிய தூய ஆவியாரின் ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' (லூக்கா 6:12)

இயேசு இறைவேண்டலில் பல மணி நேரம் செலவழித்தார் என நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இவ்வாறு இறைவேண்டலில் ஈடுபட்டார். இதற்கான காரணத்தை நாம் தேடினால் இயேசு எப்போதுமே தம் தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருப்பதில் நிலைத்திருந்தார் எனக் கண்டுகொள்ளலாம். கடவுளோடு அவருக்கு இருந்த உறவு சாதாரண மனித உறவு போன்றதன்று. மாறாக, இயேசு கடவுளின் மகன் என்பதாலும், தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் தம் தந்தையின் விருப்பப்படி நடப்பதையே தம் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்தார். கடவுளிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையானதாக இருந்தது. எனவே, எது கடவுளின் விருப்பமோ அதுவே இயேசுவின் விருப்பமுமாக அமைந்தது. பன்னிரு திருத்தூதரை இயேசு தேர்ந்தெடுத்தபோதும் அவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தபோதும் அவர்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதையே தங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொள்ளவேண்டும் என இயேசு விரும்பினார்.

நம் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கின்ற வேளையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின்போதும் நாம் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுளின் விருப்பத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் நாம் கடவுளோடு நெருங்கிய உறவுப் பிணைப்பால் இணைந்திருக்க வேண்டும். இது இறைவேண்டல் வழியாக நிகழ்கிறது. கடவுளின் உடனிருப்பு நம்மோடு உள்ளது என்னும் உணர்வில் நாம் தோய்ந்திருப்பதுதான் இறைவேண்டலுக்கு அடிப்படை. இது ஒருவித தியான மன நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும். கடவுளின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடியிலும் உணரும்போது அவருடைய பார்வையிலிருந்து நாம் அகன்றுபோதல் இயலாது. அவரோடு இணைந்து நாம் செயல்படுவோம். நம்மில் இறைவேண்டலும் பணிவாழ்வும் பிணைந்திருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை அறிந்து செயல்படுத்துவதில் நிலைத்திருக்க அருள்தாரும்.