யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-10-31

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6,திபா 18: 1-2, 2-3. 46,50,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28, மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். ஆண்டின் பொதுக்காலம் 31 ஆம் வார ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் இறை அன்பிற்கு முற்றிலும் உரியவர்கள். அதனால்தான் படைக்கும்போதே தனிப்பட்ட சிறப்புச் செயல்பாடாக மனித உருவாக்கம் அமைந்திருந்தது. பிற படைப்புக்களை விட மானுடப் படைப்பின்மீது இறைவன் கொண்டிருந்த உயரிய அன்புக்கு இந்த ஒரு எடுத்துக்காட்டே போதுமானது. இந்த மானுடம் முழுமையும் நிறைவும் கொண்டதாயிருக்க இறைவன் செய்திருக்கும் செயல்பாடுகள், படைப்பு முழுவதும், அதன் சிறப்புகள் அனைத்துமே இந்த மானுடத்திற்காகத்தான் என்றிருக்கிறதை நாம் உணர முடிகிறது.

இத்தகைய உயரிய நோக்கங்களுடன் பணியாற்றலே, வாழ்தலே இறை அன்பை உணர்ந்து வாழ்தலாகும். இறையன்பு உள்ளவர்களாக வாழவும், இறைவன் அன்புசெய்யும் அனைவரையும் நாம் அன்புசெய்து வாழவும் உறுதியேற்றவர்களாய் நம்மையே இந்த மாண்புமிக்க பலியில் ஆண்டவருக்குக் காணிக்கையாக்குவோம். எனவே இன்றைய வாசகங்களைக் கவனமுடன் கேட்டு இறைவனை அன்புச் செய்யவும், தன்னையே அன்புச் செய்யவும், பிறரையும் அன்புச் செய்யவும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
திபா 18: 1-2, 2-3. 46,50

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2யbஉ ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி

2னநக என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50யb தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி

இரண்டாம் வாசகம்

இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28

சகோதரர் சகோதரிகளே, லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப் படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ``அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, `` `இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை'' என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ``நன்று போதகரே, `கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது'' என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ``நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை'' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!

எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர் திருஅவையோடு மறைப்பணியச் சிறப்புடன் செய்ய தேவையான ஞானத்தையும், விவேகத்தையும் பெற்றிடவும், சுயநலன்களை நோக்காமல், இயேசுவைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு சேவை புரியவும் வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம்.

அனைத்திற்கும் மேலாக உம்மை அன்பு செய்வதும், எங்கள் அயலாரை அன்பு செய்வதுமே சிறந்த செபம், வழிபாடு என்னும் ஞானத்தை, அறிவுத் திறனை எங்களுக்குத் தாரும். உம்மை எங்கள் முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும், முழு அறிவோடும் அன்பு செய்ய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் நம்பிக்கையான எம் இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும், கருணையையும் அனுபவிக்க எங்களுக்கு உதவிபுரியும். எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தும்; நாங்கள் புரிகின்ற சின்னஞ் சிறிய செயல்களிலும், பேச்சிலும் உம்மைப் பறைசாற்றவும் எமக்கு உதவும். சிறப்பாக வாழ்வின் இருள் சூழ்ந்துள்ள இடங்களில் உமது ஒளியைத் தாங்குபவர்களாக எம்மை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா!

பெரும் தொற்றுநோயால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் உலக மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா!

தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் நல்லாயனே!

மறைத்தூது பணிக்காக தாராளமாக பங்களிப்புச் செய்யும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். ஆரோக்கியத்தையும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வையும் அவர்கள் அனுபவிக்கும்பொருட்டு அவர்களை மேன் மேலும் ஆசிர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம். மேலும் எல்லாவிதமான அடக்கமுறைகள், தீமைகள் மற்றும் துன்பங்களிலிருந்து பாதுகாத்திடவும் இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

துன்பங்களை நீக்குபவராம் இறைவா,

உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும், அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?"

முதன்மையான கட்டளை எது? அன்பு செய்வது. சரி. இரண்டாவது இடத்தில் உள்ள கட்டளை எது? அன்பு செய்வது.அதுவும் சரி. மூன்றாவது இடத்தில் உள்ள கட்டளை எது? அன்பு செய்வது. எல்லா கட்டளைகளுக்கும் மூலம், ஆதாரம், அடிப்படை அன்புதான்.எனவேதான் எல்லா கட்டளைகளையும் சுருக்கி இரண்டு கட்டளையாக்கினார். அதையும் இயேசு சுருக்கி "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்"(யோவா 13:34) என்னும் புதிய கட்டளையை; கொடுத்தார். ஆகவே சட்டங்கள், கட்டளைகள் எல்லாம் யாருக்கு? முதலாவது, இரண்டாவது என்று தரம் பிரிப்பது யாருக்கு? அன்பு வற்றி வரண்டுபோன சமுதாயத்திற்கு கட்டளைகளும் சட்டங்களும் அவசியம். காவல்துறையும் நீதிமன்றமும் கட்டாயத் தேவையாகிவிடுகிறது. தாயும் தகப்பனும் பிள்ளைகளும் பாசப்பிணைப்பில்வாழும் குடும்பத்திற்கு என்ன சட்டம் வேண்டும்? கொடுத்து எடுத்து வாழ்வதற்கு யார் இவர்களுக்குச் சட்டம் இயற்றுவது? எனவேதான் எல்லா சட்டங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அன்பு ஒன்றையே சமுதாயத்தின் தாரக மந்திரமாக்கச் சொல்லுகிறார் இயேசு. இதுவே இறையாட்சியின் தொடக்கம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.