முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 30வது வாரம் சனிக்கிழமை 2021-10-30
முதல் வாசகம்
யூதர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 11-12, 25-29
சகோதரர் சகோதரிகளே, கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா? ஒருபோதும் இல்லை. நானும் ஓர் இஸ்ரயேலன், ஆபிரகாமின் வழிமரபினன், பென்யமின் குலத்தினன். தாம் முன்பே தேர்ந்துகொண்ட மக்களைக் கடவுள் தள்ளிவிடவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகக் கடவுளிடம் எலியா முறையீடு செய்தது பற்றிய மறைநூல் பகுதி உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா? ஒருபோதும் இல்லை. அவர்கள் தவறு செய்ததால் யூதரல்லாதாருக்கு மீட்புக் கிடைத்தது. அவர்களிடம் பொறாமையைத் தூண்டிவிடவே இவ்வாறு ஆயிற்று. அவர்கள் தவறியதால் உலகம் அருள் வளமுற்றது; அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்; அப்படியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில்தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர். பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்; ``சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்; யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார். நான் அவர்களுடைய பாவங்களை அகற்றிவிடுவேன்; அவர்களுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்; அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள். ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.
திருப்பாடல் 94: 12-13. 14-15. 17-18
ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்; 13ய அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பல்லவி
14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர். பல்லவி
17 ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச் சென்றிருக்கும்! 18 `என் அடி சறுக்குகின்றது' என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-11
அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.
அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'தம்மைத்தாமே உயர்த்துவோர் எவரும் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்''(லூக்கா 14:11)
கடவுளாட்சியை மக்களுக்கு அறிவித்த இயேசு உலகப் பார்வையில் அமைந்த மதிப்பீடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார். எனவே அவருடைய போதனை புரட்சிகரமானதாக இருந்தது. அந்தப் புரட்சி அரசியல் புரட்சியோ சமுதாயப் புரட்சியோ அல்ல; மாறாக, ஒரு வேரோட்டமான ஆன்மிகப் புரட்சி. அதன் விளைவாக மனித சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றும், மனித உறவுகள் அன்பையும் நீதியையும் அடித்தளமாகக் கொண்டு எழ வேண்டும் என்றும் இயேசு போதித்தார். உலகக் கணிப்புப்படி, யார் யார் தம்மை உயர்த்துகிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். தாழ்நிலையில் உள்ளோர் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இயேசுவின் பார்வை வேறு. தாழ்ச்சி என்னும் நற்பண்பு நமக்கு வேண்டும் என அவர் கற்பித்தார். அப்பண்பு நம்மிடம் இருந்தால் நம்மையே உயர்ந்தவர்களாகக் கருதவோ பிறரைத் தாழ்ந்தவர்களாகக் கணிக்கவோ நாம் முற்பட மாட்டோம். உயர்வும் தாழ்வும் மனிதப் பார்வையில் எழுவது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே.
ஆனால் பதவி, அந்தஸ்து போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பாகுபடுத்தி, உயர்;ந்தோருக்கு முதலிடம் தாழ்ந்தோருக்குக்குக் கடைசி இடம் எனச் சட்டங்கள் வகுக்கின்ற மனிதர்கள் கடவுளின் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். மனித மதிப்பீடுகளைக் கடவுள் புரட்டிப் போடுவதை லூக்கா ஏற்கெனவே பதிவுசெய்தார். எடுத்துக்காட்டாகக் காண்க: லூக் 1:51-53. அங்கே மரியா கடவுளின் அரும் செயல்களை வியந்து பாடியபோது, ''வலியேரரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனப் பறைசாற்றுகின்றார். உண்மையான தாழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது? இப்போது பணிந்து போனால் பிறகு உயர்வடைவோம் என்னும் எதிர்பார்ப்போடு செயல்படுவது உண்மையான தாழ்ச்சி அல்ல. மாறாக, தற்புகழ்ச்சி என்பது கடவுளின் முன்னிலையில் எல்லா மனிதரும் சமம் என்னும் உண்மைக்கு எதிராகப் போவதை நாம் உணர்வதும், நம்மைத் தேடி வந்த கடவுள் தம்மையே தாழ்த்திக் கொண்டு நம்மோடு தம்மை ஒன்றுபடுத்திய கடவுள் என்பதைக் கருத்தில் கொள்வதும் இன்றியமையாதது. அப்போது கடவுள் செயல்படுகின்ற விதத்தில் நாமும் செயல்படுவோம். அதாவது, மனிதரிடையே பாகுபாடுகள் கற்பிக்காமல், அனைவரும் மாண்பு மிக்கவர்களே என்னும் தத்துவத்தின் அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் உருவாகிட நாமும் மனமுவந்து உழைப்போம்.
மன்றாட்டு:
இறைவா, எங்களை வேறுபாடின்றி அன்புசெய்கின்ற உம் இரக்கத்தை வியந்து போற்றிட அருள்தாரும்.
|