யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-10-29

ட்




முதல் வாசகம்

என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, ``ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். பிறகு அவர்களை நோக்கி, ``உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?'' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களை நோக்கி, 'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில்; விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக்கா 14:5-6)

எதற்கெடுத்தாலும் சட்டத்தை மேற்கோள் காட்டுகின்ற மனிதர்கள் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதைச் சில வேளைகளில் மறந்துவிடுகிறார்கள், அல்லது வேண்டுமென்றே மறைத்துவிடுகிறார்கள். ஓய்வுநாள் பற்றிய சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிய பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டதை இயேசு பல முறை கடிந்ததுண்டு. ஆடுமாடுகளுக்கு ஆபத்து நேர்ந்தால் அவற்றைக் காக்க வேண்டும் என்னும் சட்டம் பழைய ஏற்பாட்டில் உண்டு. ''உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவி செய்'' (இச 22:4) என்பது இணைச்சட்டம் அளித்த ஒழுங்குமுறை. வேறொருவரது மாடோ கழுதையோ குழியில் விழுந்து இறந்துவிட்டால் அதற்கு எவ்வாறு ஈடுசெய்வது என்பது பற்றியும் சட்டம் இருந்தது (காண்க: விப 21:33-34). இவ்வாறு மனித நலனுக்கு ஆதரவான சட்டங்கள் இருந்த பிறகும் பரிசேயர் இயேசுவிடத்தில் குறைகண்டனர். இயேசு ஆடுமாடு போன்ற விலங்குகளைக் காப்பது தவறு எனக் கூறவில்லை. மாறாக, மனிதருக்கு நன்மை செய்வதற்குக் காலம் நேரம் பார்க்கலாகாது எனவும், எந்த தருணத்திலும் நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் எனவும் இயேசு கற்பிக்கிறார். அவருடைய போதனையைக் கேட்ட பரிசேயர் இயேசு கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காமல் ''அமைதியாய் இருந்தனர்'' (லூக் 14:4). அது மட்டுமல்ல, இயேசுவின் கேள்விக்குப் ''பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக் 14:6).

இன்றைய உலகிலும் ஏழை எளியவர்க்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் எதிராக இருக்கின்ற சட்ட திட்டங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மனிதரைப் பார்த்து ''அமைதி காக்கின்ற'' போக்கு நிலவுவதை நாம் பார்க்கலாம். அநீதியான அமைப்புகளை மாற்றியமைத்து மனித வாழ்வை மேம்படுத்துகின்ற அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ''அமைதி காப்போர்'' பலர் உண்டு. ஆடுமாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மனிதருக்கு ஆதரவாக ஏன் செயல்படுவதில்லை என நம்மை நோக்கிக் கேட்கின்ற இயேசுவுக்கு நம்மால் ''பதில் சொல்ல இயலாது'' என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, அன்பு என்னும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாயிருக்க அருள்தாரும்.