யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-10-24

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 31:7-9,பதிலுரைப்பாடல்: திபா. 126:16,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 5:1-6,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம்.

இன்றைய வழிபாடு, நம்மைப் பார்க்கும் ஆற்றல் உள்ளவராக வாழ அழைக்கிறது. எனக்குப் பார்க்கும் ஆற்றல் இருக்கிறது என்பவர்கள் எல்லாம் பலவற்றைப் பார்க்காமல் அறியாமல், அல்லது உணராமல் இருக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துப் பழகிப்போன பல நேர்மையற்ற, நீதியற்ற செயல்பாடுகள் அவர்கன் மனதைப் பாதிக்காமல் இருப்பதே அவர்கள் சரியான பார்வை உள்ளவர்கள் அல்ல என்ற நிலையை உணர்த்திக்கொண்டிருக்கின்றன. எனவே அத்தகையவர்கள் புதிய பார்வை பெற வேண்டும் என இன்றைய வழிபாடு அவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

இயேசுவின் மதிப்பீடுகளை வாழ்வாக்கும் ஒரு அற நெறியாளர், ஒரு நேர்மையற்ற செயல்கண்டு அசைவின்றி இருப்பவரல்ல. அறியாமை இருளில் மயங்கிக் கிடக்கும் மானுடம் விழித்தெழுந்து வீறுநடை போடத் தொடங்க வேண்டும். புதிய புதிய வழிமுறைகளால் மானுட சிதைவை வேறருக்கப் புறப்படவேண்டும். கண்களைத் திறக்கும் இயேசுவின் அருள் நெறியில் வாழ, புதிய சமுதாயம் படைக்க புனிதமான இப் பலியில் பங்கேற்று இறையருள் நாடுவோம்.



முதல் வாசகம்

பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்துவருவேன்:
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 31:7-9

ஆண்டவர் கூறுகிறார்; யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள். இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்தார்!
பதிலுரைப்பாடல்: திபா. 126:16

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது: பல்லவி:

ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்ட னர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்: அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி:

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி:

விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது அழுகையோடு செல்கின்றார்கள்: அரிகளைச் சுமந்து வரு ம்போது அக்களிப்போடு வருவார்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்

மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 5:1-6

சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும். அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், "மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்றும் கூறப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, "அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, "துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார். இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பெற்று, திருச்சபையின் மக்கள் அனைவரையும் ஞானத்தில் வழி நடத்த தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வின் நிறைவே இறைவா,

வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய ஆவியின் ஞானத்தை நிறைவாகத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் நம்பிக்கையான எம் இறைவா!

நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா!

பெரும் தொற்றுநோயால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் உலக மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

நேர்மையின் நாயகனான எம் இறைவா! என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா!

இன்றைய நவீனக் காலத்தில் உலகில் இவ்வுலக மகுடங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், சிலுவையை மகுடமாகவும், தன் உயிரைப் பிறருக்கு வழங்குவதை வாழ்வின் நோக்கமாகவும் இயேசு முன்வைத்தார் என்பதை உணர்ந்து எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா!

உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும், அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

துன்பங்களை நீக்குபவராம் இறைவா,

உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும், அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் !

பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு ஒரு விவிலியக் கதாநாயகன். அவர் இயேசுவிடமிருந்து பார்வை பெற்ற பாணியே ஒரு வித்தியாசமான பாணிதான். அவருடைய தனித்தன்மை பின்வரும் வழிகளில் வெளிப்படுகிறது: 1. பார்வையற்ற அவர் நம்பிக்கை இழந்து, விரக்தியுடன் வாழவில்லை. நம்பிக்கை நிறைந்த ஒரு மனிதராக இருந்தார். எனவேதான், இயேசு அவ்வழியே போகிறார் என்று அறிந்ததும், கத்தி வேண்டினார். 2. பிற மனிதர்கள் அவரைப் பேசாதிருக்குமாறு அதட்டியும்கூட, என்மீது இரங்கும் என்று இன்னும் உரக்கக் கத்தினார். 3. பின்னர், தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார் என்று எழுதியுள்ளார் நற்செய்தியாளர். 4. இயேசு அவருடைய விருப்பத்தை வினவியபோது, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்று தம் விருப்பத்தை அறிக்கையிட்டார். 5. இறுதியாக, இயேசு நீர் போகலாம் என்று அவரைப் பார்வையுடன் அனுப்பியபோது, அவர் இயேசுவைப் பின்பற்றி, அவருடன் வழி நடந்தார் என்று முடிகிறது இக்கதாநாயகனின் கதை.

பர்த்திமேயுவிடமிருந்து இந்த ஐந்து பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம். 1. வாழ்வில் நாம் எதையும் இழக்கலாம். ஆனால், நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. 2. இயேசுவின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு அவரிடம் விடாது மன்றாட வேண்டாம். 3. நமது இறைநம்பிக்கை பயனற்றது என்று பிறர் நம்மைச் சோர்ந்துபோக வைத்தாலும்கூட, இன்னும் அதிக நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும். 4. நாம் மீண்டும் பார்வை அடைய வேண்டும் என்னும் கருத்துக்காக இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும். 5. இயேசுவின் அருள்கரத்தால் தொடப்பட்ட பின், இயேசுவை வாழ்நாள் முழுவதும் பின்தொடரவேண்டும். விவிலிய நாயகன் பர்த்திமேயுவிடமிருந்து இந்த வரத்தை நாம் பெற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

வாழ்வின் நிறைவே இறைவா, வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் துhய ஆவியின் ஞானத்தை நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.