யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் சனிக்கிழமை
2021-10-23
முதல் வாசகம்

உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார். ஏனெனில், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல்கள் 24: 1-2. 3-4. 5-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்''

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

இடத்தை அடைத்துக்கொண்டு !

இன்றைய நற்செய்தி வாசகம் நமது வாழ்வு கனி தருவதாக அமைந்திருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. “நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராயிருப்பதே தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (யோவா 15:8) என்னும் வார்த்தையை இங்கு நாம் நினைவுகூர வேண்டும். இறைவன் நம்மிடமிருந்து நற்கனிகளை எதிர்பார்க்கின்றார். நாம் கனி தராவிட்டால், நாம் பரிதாபத்துக்குரியவர்களே!

இயேசு கூறிய அத்திமர உவமையில், உரிமையாளர் தொழிலாளியிடம் சொல்லும் புகாரைக் கொஞ்சம் கவனிப்போம்: “மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனியைத் தேடிவருகிறேன். எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?” ஆம், கனி தராத மரம் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது. கனி தராத ஒவ்வொரு கிறித்தவரும், இந்த உலகில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, நாம் கனி தரவேண்டும். உரிமையாளர் அந்த மரத்துக்குப் போதுமான காலம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகளாகக் கனி தேடியபிறகுதான், மரத்தை வெட்டும் முடிவுக்கு அவர் வந்தார். நம்முடைய வாழ்விலும் அப்படியே. எத்தனையோ ஆண்டுகள் நாம் கனி தராமல் இருந்தால், இறைவன் ஏமாற்றமே அடைவார். எனவே, இந்தத் தவக்காலத்தில் நாம் மனமாற்றம் பெறுவோம். நம்முடைய வாழ்வு கனி தருவதாக அமையட்டும். நம்முடைய வாழ்வில் நற்செயல்கள் பெருகட்டும். நம்முடைய வாழ்வு இறைவனுக்கும், பிறருக்கும் உகந்ததாக அமையட்டும்.

மன்றாட்டு:

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற கொடைகள், ஆற்றல்கள், திறமைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறுகிறோம். இந்தத் திறமைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், பிறருக்கும் கனிகளை வழங்கும் அருளை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் எங்கள் வாழ்வில் மாற்றங்களை அருளும். நற்கனி கொடுப்பவர்களாக எங்களை மாற்றும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.