யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வியாழக்கிழமை
2021-10-21

புனித அந்தோனி மரிய கிளாரெட்




முதல் வாசகம்

இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை. அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப் படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா? ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
திருப்பாடல்கள் 1: 1-2. 3. 4,6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை,

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (லூக்கா 12:51)

இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர் உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.

ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்'' (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: ''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, உண்மையான அமைதியை உம்மில் கண்டுகொள்ள அருள்தாரும்.