யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-10-12

புனித தெரேசா




முதல் வாசகம்

இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-25

சகோதரர் சகோதரிகளே, நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் - அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு. ஏனெனில் ``நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்'' என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதற்கு வழியே இல்லை. ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின; உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப் போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம்11;37-41

37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 38 உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். 39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது; "பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. 40 அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! 41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13)

இயேசு தம் பணிக்காலத்தின்போது பல மக்களுக்கு நலமளித்தார். அவ்வாறு நலமடைந்தவர்களுள் தொழுநோயாளரும் இருந்தார்கள். இன்று நாம் தொழுநோய் என அறிவியல் முறையில் கருதுவது மட்டுமல்லாமல், எந்த விதமான தோல் நோயும் அக்காலத்தில் தொழுநோய் எனவே அழைக்கப்பட்டது. இயேசு மக்களுக்குக் குணமளிக்கிறார் என்னும் செய்தியைக் கேட்ட பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகி அவர் தங்களைக் குணமளிக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறார்கள்; ஆனால் யூத சட்டப்படி அவர்கள் தங்கள் நோய் பிறருக்குப் பரவிவிடாமல் இருக்க தூரத்தில்தான் நிற்க வேண்டும். அவர்கள் பிற மக்களோடு தொடர்புகொள்ளக் கூடாது என்னும் சட்டம் இருந்ததால் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்டுத்தான் வாழ வேண்டியிருந்தது. இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர் இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு நினைத்தால் தங்களுக்குக் குணமளிக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களுக்குக் குணமளிக்கிறார்.

பத்துப் பேர் நோய்நீங்கப் பெற்ற பிறகும் ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இவ்வாறு வந்தவர் அக்காலத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்ட சமாரியர் என்பது வியப்புக்குரியதே. ஆனால் இயேசு இந்தத் தாழ்த்தப்பட்ட மனிதரின் நம்பிக்கையைப் போற்றி உரைக்கிறார். ''உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்று பாராட்டிப் பேசுகிறார் (காண்க: லூக்கா 17:19). இங்கே ''நலம்'' என வருகின்ற சொல்லுக்கு உடல் நலம் தவிர, உள நலம், ஆன்ம நலம், மீட்பு என்னும் ஆழ்ந்த பொருள் உண்டு. இயேசுவின் அருளால் உடல்நலம் பெற்ற சமாரியர் கடவுளோடு நல்லுறவு அடைந்தார். நன்றியோடு கலந்த மகிழ்ச்சியை அச்சமாரியர் அடைந்தார். கடவுளின் அன்பினை அவர் தம் உள்ளத்தில் அனுபவித்தார். இயேசுவின் சீடராகிய நாமும் நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்றால் நம் பிணிகள் யாவும் நீங்கிப் போக, நாம் ''முழு நலன்'' அடைவோம். இந்த அனுபவத்தைப் பெறுவோர் உண்மையில் பேறுபெற்றவர்களே'

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் பிணிகளைப் போக்கி நலமளிக்கின்றீர் என நாங்கள் உணரச் செய்தருளும்.