யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் திங்கட்கிழமை
2021-10-11




முதல் வாசகம்

பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப் பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
திருப்பாடல்கள் 98: 1. 2-3. 3-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ``இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13)

இயேசு தம் பணிக்காலத்தின்போது பல மக்களுக்கு நலமளித்தார். அவ்வாறு நலமடைந்தவர்களுள் தொழுநோயாளரும் இருந்தார்கள். இன்று நாம் தொழுநோய் என அறிவியல் முறையில் கருதுவது மட்டுமல்லாமல், எந்த விதமான தோல் நோயும் அக்காலத்தில் தொழுநோய் எனவே அழைக்கப்பட்டது. இயேசு மக்களுக்குக் குணமளிக்கிறார் என்னும் செய்தியைக் கேட்ட பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகி அவர் தங்களைக் குணமளிக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறார்கள்; ஆனால் யூத சட்டப்படி அவர்கள் தங்கள் நோய் பிறருக்குப் பரவிவிடாமல் இருக்க தூரத்தில்தான் நிற்க வேண்டும். அவர்கள் பிற மக்களோடு தொடர்புகொள்ளக் கூடாது என்னும் சட்டம் இருந்ததால் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்டுத்தான் வாழ வேண்டியிருந்தது. இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர் இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு நினைத்தால் தங்களுக்குக் குணமளிக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களுக்குக் குணமளிக்கிறார்.

பத்துப் பேர் நோய்நீங்கப் பெற்ற பிறகும் ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இவ்வாறு வந்தவர் அக்காலத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்ட சமாரியர் என்பது வியப்புக்குரியதே. ஆனால் இயேசு இந்தத் தாழ்த்தப்பட்ட மனிதரின் நம்பிக்கையைப் போற்றி உரைக்கிறார். ''உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்று பாராட்டிப் பேசுகிறார் (காண்க: லூக்கா 17:19). இங்கே ''நலம்'' என வருகின்ற சொல்லுக்கு உடல் நலம் தவிர, உள நலம், ஆன்ம நலம், மீட்பு என்னும் ஆழ்ந்த பொருள் உண்டு. இயேசுவின் அருளால் உடல்நலம் பெற்ற சமாரியர் கடவுளோடு நல்லுறவு அடைந்தார். நன்றியோடு கலந்த மகிழ்ச்சியை அச்சமாரியர் அடைந்தார். கடவுளின் அன்பினை அவர் தம் உள்ளத்தில் அனுபவித்தார். இயேசுவின் சீடராகிய நாமும் நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்றால் நம் பிணிகள் யாவும் நீங்கிப் போக, நாம் ''முழு நலன்'' அடைவோம். இந்த அனுபவத்தைப் பெறுவோர் உண்மையில் பேறுபெற்றவர்களே'

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் பிணிகளைப் போக்கி நலமளிக்கின்றீர் என நாங்கள் உணரச் செய்தருளும்.