யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-10-05
முதல் வாசகம்

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக் கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். ``இதனால் அரசரும் அரசவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.'' கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2
திருப்பாடல்கள் 130: 1-2. 3-4. 7-

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ``ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

தேவையானது ஒன்றே !

உபசரிப்பது என்பது நல்ல பண்பாடு மட்டுமல்ல, ஒரு விவிலிய மதிப்பீடும்கூட. வழிப்போக்கர்களை வரவேற்றுப் பணிவிடை செய்ததால், தங்களை அறியாமலே வானதூதருக்குப் பணிவிடை செய்தவரும் உண்டு எனப் பவுலடியார் கூறியுள்ளார். ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, சமூகத்தில் யாருக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுவதில்லையோ, அவர்களை வரவேற்று, உபசரிப்பது இறைவனுக்கே செய்யும் பணிவிடை. எனவேதான், “சின்னஞ் சிறு என் சகோதர சகோதரிகளுக்குச் செய்யும்போதெல்லாம், எனக்கே செய்தீர்கள்â€? என இயேசு மொழிந்தார். முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மூவர் வந்தபோது, ஆபிரகாம் அவர்களை வரவேற்று, மிகுந்த ஈடுபாட்டுடன் உபசரித்தார். அதனால், இறையாசியை நிறைவாகப் பெற்றுக்கொண்டார். மார்த்தாவும், மரியாவும் ஆண்டவர் இயேசுவைத் தங்கள் இல்லத்தில் வரவேற்று, உணவு வழங்கி, அவரோடு உறவாடினர். பணிவிடையோடு, பாதம் அமர்ந்து உரையாடியது இயேசுவைக் கவர்ந்தது. நாமும் உதவிகளோடு, நட்புறவும் வழங்கினால், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும்.

மன்றாட்டு:

எங்கள் இல்லங்களில் மறைவான விருந்தாளியாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் வாழும் எளியோரைக் கண்ணோக்கி, அவர்களுக்கு மாண்பும், மதிப்பும் நிறைந்த உதவிகளைச் செய்ய எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.