யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 26வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
2021-09-29




முதல் வாசகம்

வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 6: 1, 3-7

எல்லாம் வல்ல இறைவன் கூறுவது: ``சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;
திருப்பாடல்கள் 146;7-10

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். -பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

9bஉ அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 11-16

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய். அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

`தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: ``செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

செல்வரின் பாவம் என்ன?

இலாசரும், செல்வரும் என்னும் இந்த உவமை லூக்கா நற்செய்தியில் மட்டுமே நாம் காணும் ஓர் அழகான உவமை. பல செய்திகளைத் தன்னிலே கொண்டிருக்கும் அருங்கதை. இந்த உவமையில் வரும் செல்வரின் பாவத்தைப் பற்றி இன்று சிந்திப்போம். இந்த மனிதர் விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார் என்பது மட்டுமே அவரைப் பற்றி இயேசு தருகின்ற குறிப்பு. இன்னொரு மறைமுகமான குறிப்பும் தரப்படுகின்றது. இலாசர் என்னும் ஏழை அச்செல்வருடைய வீட்டு வாயிலருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். அவ்வளவுதான். ஆனால், இறந்ததும் அச்செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார் என்கிறார் இயேசு. செல்வர் செய்த பாவம்தான் என்ன? உவமையின் பார்வையில், அவர் வாழ்நாளில் நலன்களையே பெற்றதும், தம் வீட்டு வாயிலில் கிடந்த ஏழை இலாசர் என்னும் மனிதர்மீது எந்த அக்கறையும் காட்டாமல் இன்புற்று வாழ்ந்த தன்னலமும்தான் அவரது பாவங்கள். எனவே, நேரடியாக தீய செயல்கள் செய்யாவிட்டாலும்கூட, பகிராமல் வாழ்வதும், பிறர் துன்புறும்போது தான் மட்டும் இன்புற்று வாழ்வதும் இறைவனுக்கெதிரான பாவஙகள் என்பது தெளிவாகிறது.

மன்றாட்டு:

உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தன்னலம் என்னும் பாவத்திலிருந்தும், பிறர்மீது அக்கறை கொள்ளாமல் இன்புற்று வாழும் சமூக அக்கறையற்ற தன்மையிலிருந்தும் எங்களை விடுவித்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.