பொதுக்காலம் 26வது வாரம் செவ்வாய்க்கிழமை 2021-09-28
முதல் வாசகம்
வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, ``நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்'' என்று சொல்வார்கள்.
மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ``அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, `கடவுள் உங்களோடு இருக்கின்றார்' என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
கடவுள் நம்மோடு இருக்கின்றார்.
திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)
1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. பல்லவி
4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, `இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும். 5 `இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். பல்லவி
6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, `இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். 7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து `எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது' என்பர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ``ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?'' என்று கேட்டார்கள்.
அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை
அழிக்குமாறு செய்யவா?'' (லூக்கா 10:54)
இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார். கலிலேயாவிலிருந்து எருசலேம் செல்லும் வழியில் சமாரியர் வாழும் பகுதிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஆனால் சமாரியருக்கும் யூதருக்கும் இடையே நல்லுறவு இல்லை. எனவே இயேசுவையும் அவருடைய சீடர்களையும் சமாரியர் தங்கள் ஊர் வழியாகச் செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது சீடருக்குக் கோபம் எழுகிறது. தங்கள் தலைவராகிய இயேசுவைத் தடுக்க இவர்கள் யார் என அவர்கள் எண்ணுகின்றனர். எனவேதான் ''ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?'' என்று கேட்கின்றனர்.
நம் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் நடக்க வேண்டும் என நாம் பொதுவாக விரும்புகின்றோம். ஏதோ காரணத்தால் நாம் விரும்பியது நடக்கவில்லை என்றால் நமக்குக் கோபம் வருகிறது. இயேசுவின் சீடர்களும் இவ்வாறே கோபமுற்று, தங்களைத் தடுத்தவர்களைத் தண்டிக்க எண்ணுகின்றனர். பழிக்குப் பழி என்னும் தத்துவத்தைச் செயல்படுத்த அவர்கள் துடிக்கின்றனர். ஆனால் இயேசு அவ்வாறு எண்ணவில்லை. ஆத்திரத்தில் ஒரு காரியத்தைச் செய்யும்போது ஆபத்தான விளைவுகள் ஏற்படக் கூடும். ஆனால் ஆர அமர சிந்தித்துச் செயல்படும்போது நம் செயல்களின் விளைவுகள் எவ்வாறு இருக்கலாம் என்பதை நாம் தெளிவாக உணர முடியும். அப்போது நம் செயல்களும் நல்லவையாக அமைந்திட வாய்ப்புப் பிறக்கும்.
மன்றாட்டு:
இறைவா, பழிக்குப் பழி என்னும் மன நிலையைக் கைவிட்டு, மன்னித்து ஏற்கும் உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.
|