யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-09-26

(இன்றைய வாசகங்கள்: எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம்: 11:25-30,பதிலுரைப்பாடல் திபா. 19:7,9, 11-13,திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 5:1-6,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 9: 38-48)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கடவுளுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நமது பாவ இயல்புகளைக் களைந்துவிட்டு கடவுளுக்கு உரியவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மை கடவுளை அறிந்துகொள்ளாத மற்றவர்கள் முன்னிலையில், கடவுளுக்கு சான்று பகர்பவர்களாக வாழவும், கிறிஸ்துவின் பெயரால் நற்செயல் புரிவோரை ஏற்றுக்கொள்ளவும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது உடல் உறுப்புகளைக் கொண்டு பாவம் செய்வதை விட, அவற்றை வெட்டி எரிந்துவிடுவதே நல்லது என்ற கடுமையான வார்த்தைகள் இயேசுவின் வாயில் இருந்து புறப்படுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்களாய், புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம்: 11:25-30

அக்காலத்தில், ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்; ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், "எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்" என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, "மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்" என்றார். ஆனால் மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு!" என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
பதிலுரைப்பாடல் திபா. 19:7,9, 11-13

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்: அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு. தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். பல்லவி

மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக் கட்டும்: அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்: பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 5:1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே உமது வார்த்தையே உண்மை உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பண மாக்கியருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 9: 38-48

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார். அதற்கு இயேசு கூறியது; "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புனிதத்தின் ஊற்றாம் இறைவா,

உமது திருச்சபையின் வழிகாட்டிகளாக நீர் தேர்ந்தெடுத்துள்ள எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இவ்வுலகின் தீய வழிகளில் இருந்து விலகி, புனிதம் நிறைந்த வாழ்வு வாழத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவாக்கினரை உருவாக்குபவராம் இறைவா,

உமது திருச்சபையின் மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளுக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழ்ந்து, உலக மக்களை மனந்திருப்பத் தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அற்புதங்கள் நிகழ்த்துபவராம் இறைவா,

உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது மேலான வல்ல செயல்களாலும், அகத் தூண்டுதலாலும் உம்மை அறிந்து ஏற்றுக் கொள்ளத் தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நன்மைகளின் நாயகனே இயேசுவே,

யார் நல்லது செய்தாலும். அதை ஏற்றுக்கொள்ளவும். பாராட்டவும், அதைத் தடுக்காமல் ஊக்கப்படுத்தவும் எனக்கு நல்ல மனதைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே!

தொற்றுநோயின் தாக்கம் குறைந்து, கல்விமனைகள் திறக்கப்படவும், எங்கள் பிள்ளைகள் மீண்டும் தங்கள் பள்ளி பருவத்தை முழுமையாக அனுபவித்து, கல்வியிலும் பிறர் அன்பிலும், இறை நம்பிக்கையிலும் சிறந்து விளங்கத் தேவையான ஞானத்தையும், மன உறுதியையும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே!

மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவுச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா!

உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும், அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

துன்பங்களை நீக்குபவராம் இறைவா,

உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும், அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

தடுக்க வேண்டாம் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உளவியல் முதிர்ச்சியையும், பரந்த மனநிலையையும் கண்டு வியக்கிறோம். இயேசுவைச் சாராத, அவரது சீடர் என்று ஏற்பிசைவு செய்யப்படாத ஒரு மனிதர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டினார் என்பதே மிகவும் வியப்பான ஒரு செய்திதான். இயேசுவின் பெயருக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த சான்று வேறென்ன தேவை! அவர்களைத் தடுக்கப் பார்த்தோம் என்று சீடர்கள் சொன்னபோது இயேசுவின் பதில் அவர்களை மட்டுமல்ல, நம்மையும் வியக்க வைக்கிறது. தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார் என்று தன்னம்பிக்கையுடன் இயேசு கூறுகிறார்.

குறுகிய மனம், பொறாமை, தன்னம்பிக்கையின்மை, இவற்றை அடித்து நொறுக்கிவிட்டு, நன்மையை ஏற்பிசைவு செய்யும் பரந்த மனதையும், தன்னம்பிக்கையையும் இயேசு வெளிப்படுத்துகிறார். நமது திறமைகளை, கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் நமக்கு இயேசு பாடம் கற்றுத் தருகிறார். பிறரும் நம்மைப் போல நல்ல பணிகள் ஆற்றட்டும், நற்பெயர் வாங்கட்டும் என்று நினைப்பவரெல்லாம் இயேசுவின் நல்ல சீடர்கள். நாமும் அவ்வாறே முயல்வோம்.

மன்றாட்டு:

நன்மைகளின் நாயகனே இயேசுவே, யார் நல்லது செய்தாலும். அதை ஏற்றுக்கொள்ளவும். பாராட்டவும், அதைத் தடுக்காமல் ஊக்கப்படுத்தவும் எனக்கு நல்ல மனதைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.