யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் சனிக்கிழமை
2021-09-25

புனித வென்சஸ்லோஸ்




முதல் வாசகம்

இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5,10-11

நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். `எங்கே போகிறீர்?' என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், `எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்' என்றார். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: `எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல் இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்', என்கிறார் ஆண்டவர். `மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
எரே 31: 10. 11-12. 13

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். - பல்லவி

11 யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். - பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

விளக்கம் கேட்க அஞ்சினார்கள் !

இயேசுவுக்கும், அவரது சீடர்களுக்கும் இடையே நிலவிய தகவல் இடைவெளி பற்றி இன்றைய வாசகம் பேசுகிறது. இயேசு அவர்களிடம் நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்று தன் பணி வாழ்வின் நிறைவு பற்றி எடுத்துச்சொல்கிறார். அவர்களுக்கோ அது புரியவில்லை. புரிந்தால்தானே மனத்தில் வைக்க முடியும். புரியாதது முதல் தவறு என்றால், அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சியது இரண்டாவது தவறு. பள்ளியில் சில மாணவர்கள் செய்யும் அதே தவறுகள்தான். ஆசிரியர் சொல்லித் தந்தது புரியவி;ல்லை. அதற்கு விளக்கம் கேட்கவும் துணிவு இருப்பதில்லை. இதே நிலையில்தான் இயேசுவின் சீடர்களும் இருந்தனர். இறைவனோடு நமக்குள்ள உறவிலும் சரி, நமது குடும்ப மற்றும் பணிவாழ்வின் உறவுகளிலும் இந்த இரு நிகழ்வுகளும் நமக்கு நிகழலாம். உறவுகளின் சில உரையாடல்கள், செயல்பாடுகள் நமக்குப் புரியாமல் இருக்கலாம். அப்போது நாம் அதற்கான விளக்கத்தை உடனே கேட்பதே உறவை வளர்க்கும் செயல். விளக்கம் கேட்கத் தயங்கினாலோ, அஞ்சினாலோ உறவில் விரிசல்கள் தோன்றத்தான் செய்யும்.

மன்றாட்டு:

உறவின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். என் வாழ்வில் நிகழும் புரியாத செயல்கள் பற்றிச் சிந்திக்கவும், செபிக்கவும் எனக்கு ஆற்றல் தாரும். என்னுடைய உறவுகளில் இடைவெளி விழும்பொழுது துணிவுடன் விளக்கம் கேட்டு உறவுகளைச் சீர்படுத்த எனக்கு ஞானத்தைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.