யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் புதன்கிழமை
2021-09-22




முதல் வாசகம்

`கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9

மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து, எஸ்ராவாகிய நான் கூறியது: ``கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டுவிட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும், அடிமைத்தனத்திற்கும், கொள்ளைக்கும், வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்புவிக்கப்பட்டோம். ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுது பார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;
தோபி 13: 2,3. 6,7. 8.

2 அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. பல்லவி

3 இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார். பல்லவி

6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; பல்லவி

தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக் கொள்ளார். 7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; பல்லவி நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். பல்லவி

8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன் பல்லவி

. பாவிகளே மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஏரோது இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக்கா 9:9)

இங்கே வருகின்ற ஏரோது வரலாற்றில் ''பெரிய ஏரோது'' என அழைக்கப்படுகின்ற மன்னன் அல்ல. மாறாக, அந்த மன்னனின் ஒரு மகனாகிய ''அந்திப்பா'' என்பவன். இவன் ஒரு ''குறுநில மன்னன்'' என லூக்கா குறிப்பிடுகிறார். பெரிய ஏரோதின் சாவுக்குப் பின் அவனுடைய அரசு பிளவுண்டது. அதில் கலிலேயா மற்றும் பெரேயா அடங்கிய பகுதி அந்திப்பாவுக்கு அளிக்கப்பட்டது. கலிலேயாவில்தான் இயேசுவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. அந்திப்பா தன் ஒன்றுவிட்ட சகோதரனான பிலிப்புவின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டதைத் திருமுழுக்கு யோவான் கண்டித்தார். எனவே, அவன் அவரைக் கொன்றுபோட்டான். இயேசு மக்களுக்குக் கடவுளின் பெயரால் போதிக்கிறார் எனவும் புதுமைகள் பல நிகழ்த்துகிறார் எனவும் கேள்விப்பட்ட அந்திப்பா ஏரோது ''இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக் 9:9).

இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட பல மக்கள் அவரைக் ''காண'' விரும்பினார்கள். ஏரோதுவும் அவரைக் ''காண'' விரும்பினான். ஆனால் ஏரோது நேர்மையான உள்ளத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. ஏற்கெனவே திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்ட ஏரோது இப்போது இயேசுவையும் ''காண'' விரும்பினான் என்றால் அது நல்ல எண்ணத்தோடு நிகழ்ந்ததல்ல என நாம் அறிந்துகொள்ளலாம். இயேசுவும் திருமுழுக்கு யோவானைப் போல ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் பேசினார். மக்கள் பலர் அவரை நாடிச் சென்றனர். ஆக, இயேசுவும் தனக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவாரோ என ஏரோது ஐயமுற்றதற்கு ஆதாரம் இருந்தது. எனவே, ஏரோது இயேசுவையும் ஒழித்துக் கட்டலாமா என சிந்தித்திருக்க வேண்டும். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவைத் தேடுகின்றோமா? அவரைக் காண விரும்புகின்றோமா? எதற்காக அவரைக் காண விரும்புகிறோம்? ஏற்கெனவே இயேசுவிடம் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் இயேசுவைக் ''காண'' விரும்புவதும் அவரைத் ''தேடுவதும்'' ஒரே ஒரு நோக்கத்திற்காகவே இருக்கும். அதாவது அவர்கள் இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து, அவரை இன்னும் அதிக ஆர்வத்தோடு பின்செல்ல விரும்புகிறார்கள். ஆனால் நேர்மையற்ற உள்ளத்தோடும் குறைகாண்கின்ற மன நிலையோடும் இயேசுவைத் ''தேடிய'' ஏரோதுவின் மன நிலை இன்றைய உலகில் நிலவத்தான் செய்கிறது. இயேசுவின் போதனைக்கு ஏற்ப வாழ்கின்ற மக்கள் பலர் உலகின்; பல பகுதிகளில் துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அரசியல் ஆதாயம் தேடுகின்ற சில சந்தர்ப்ப வாதிகள் இந்திய நாட்டில் கிறிஸ்தவ நம்பிக்கை வளர்வதைக் கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு, வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை நாமறிவோம். இயேசுவின் போதனையை நாம் மன உறுதியோடு கடைப்பிடித்து வாழ்வதே இந்த எதிர்ப்புகளுக்கு நாம் அளிக்கும் பதிலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்பு செய்கின்ற உம்மையும் உம் திருமகனையும் தேடுவதில் நாங்கள் ஒருநாளும் ஓய்ந்துவிடாதிருக்க அருள்தாரும்.