யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் சனிக்கிழமை
2021-09-21

புனித மத்தேயு




முதல் வாசகம்

நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அழைத்தலும், அறிவிப்பும் !

இன்று நற்செய்தியாளரும், திருத்தூதருமான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய அழைப்பையும், நற்செய்தி அறிவிப்பையும் இன்று நினைவுகூர்ந்து அவருக்காக இறைவனைப் போற்றுவோம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி தண்டுபவராகப் பணியாற்றியவர். எனவே, பாவி என்று கருதப்பட்டவர். இருப்பினும், அவரையும் இயேசு தம் சீடருள் ஒருவராக அன்புடன் தேர்ந்துகொண்டார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அறிக்கையிட்டார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுதியுள்ளவராக வாழ்ந்தார். நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். இன்றும் அவர் எழுதிய நற்செய்தி நமக்கெல்லாம் ஊக்க மருந்தாகத் திகழ்கிறது. நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நூலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா?

மன்றாட்டு:

நற்செய்தியின் நாயகனே இறைவா, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை நீர் அழைத்ததுபோலவே, தகுதியற்ற என்னையும் உமது சீடனாக அழைத்ததற்காக நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, என் வாழ்வையும், பணியையும் ஆசிர்வதியும். அதனால், பிறர் நற்செய்தி மதிப்பீடுகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்வார்களாக. இதனால், நீர் மாட்சிமை அடைவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.