திருவழிபாடு ஆண்டு - B 2021-09-19
(இன்றைய வாசகங்கள்:
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம்: 2:12,17-20,பதிலுரைப்பாடல்: திபா. 54:1-4,6 ,திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 3:16-4:3
,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 9:30-37 )
திருப்பலி முன்னுரை
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய்
உள்ளோருடன் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே,
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்:
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது திருப்பெயரின் வல்லமையால் நம்மைக் காப்பாற்றும்
விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு.
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய்
உள்ளோருடன் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே,
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: இதுவே நன்று.' என்னும் இறைவார்தைகள் இன்று
எமது இதயத்திலிருந்து எழுவதாக மாறட்டும். ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும். என்னும் இறைவார்த்தை எமது இயக்க ஆற்றல் சக்தியாக மாறட்டும்.இவைகளை நம் இதயத்தில் இருத்தி இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம்: 2:12,17-20
பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது:"நீதி மான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள். நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்: முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்: பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்: ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
பதிலுரைப்பாடல்: திபா. 54:1-4,6
கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். பல்லவி
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. பல்லவி
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்:
என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்:
தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: இதுவே நன்று. பல்லவி
இரண்டாம் வாசகம் அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 3:16-4:3
சகோதர,சகோதரிகளே, பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்: பொறுமை கொள்ளும்: இணங்கிப் போகும் தன்மையுடையது: இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது: நடுநிலை தவறாதது: வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்: போராசை கொள்கிறீர்கள்: அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்: சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே,
நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 9:30-37
அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடைப் பெறுவதைவிடப் பணிப் புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இறைமகனாயிருந்தும் உம்மையே தாழ்த்திக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் உள்ள “யார் பெரியவர்?” என்னும் போட்டி மனநிலையை அகற்றி, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்யவும், பிறரின் தலைமையை ஏற்று செயல்படவும் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எம் வாழ்வுக்கு ஆதரவாயுள்ள தந்தையே! பல்வேறு நிகழ்வுகள் மூலமாக நீர் எமக்கு எப்பொழுதும் ஆதரவாயிருக்கின்றீர் என்னும் மாபெரும் உண்மையை நாங்கள் உணர்ந்து உமக்கு நன்றி சொல்லுகின்றோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் முன்மாதிரிகையான வாழ்வால் அமைதியை ஏற்படுத்துவோராகவும்,இரக்கமும், நற்செயல்களும் கொண்டவர்களாகவும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அல்லனவற்றை அழித்து நல்லனச் செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும், உறுதியையும் தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா! பேராசையும் பொறாமையுமே சண்டைச் சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும், பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ, அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..
வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவுச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா! உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும், அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
துன்பங்களை நீக்குபவராம் இறைவா, உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும், அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
எதைப் பற்றி வாதாடிக்கொண்டிருந்தீர்கள் ?
குடும்பங்களில், குழுக்களில், பணித்தளங்களில், ஏன் எங்கெல்லாம் மனிதர்கள் ஒன்று கூடுகிறார்களோ, அங்கெல்லாம் உரையாடல்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சில முறைகள் வாதாட்டமும், சொற்போரும் நிகழுகின்றன. இது இயல்புதான். ஆனால், இந்த வாதாடுதலும், சொற்போர்களும் எதை மையம் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் குழுமங்களின், குடும்பங்களின், கூட்டங்களின் தராதரத்தை எடுத்துக்காட்டுகின்றன. வருத்தமூட்டும் வகையில், இயேசுவின் சீடர்கள் வாதாடிக்கொண்டு வந்தது தங்களுக்குள் யார் பெரியவர்? என்பது பற்றி. அவர்களின் தாழ்வான மனநிலையை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது இந்த நிகழ்வு. இயேசு அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார், திருத்துகிறார். உண்மையிலே பெரியவர் யார் என்பது பற்றிய புதிய விளக்கத்தை அளிக்கின்றார்.
நமது உரையாடல்களைச் சற்றே ஆய்வு செய்வோமா? நாம் உணவு உண்ணும் நேரங்களில், பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருக்கும் வேளைகளில் எதைப் பற்றி வாதாடுகிறோம் என்பதைப் பற்றித் தன்னுணர்வு கொள்ளவும், வாதாட்டு மையப் பொருள்களை மாற்றி அமைக்கவும் இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. இனிமேலாவது, தனி நபர்களின் நிறை,குறைகள் பற்றியோ, பதவி, பெருமைகள் பற்றியோ வாதாடுவதைத் தவிர்ப்போம். வாதாடுதல் பல வேளைகளில் உறவு முறிவுக்கே இட்டுச்செல்கிறது என்பதையும் மனதில் கொள்வோம். தேவையிருந்தால், மனித மாண்பை, உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் நம் சொற்போர்கள் அமையட்டும். இல்லாவிட்டால், அமைதி காப்பதே நலம்.
மன்றாட்டு:
தாழ்ச்சியின் நாயகனே இயேசுவே, யார் பெரியவர் என்று வாதாடிக்கொண்டு வந்த சீடர்களுக்கு உண்மையை உணர்த்தியதற்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உரையாடல்களில் எங்கள் பெருமையை, உயர்வைத் தேடாமல், பிறருக்குத் தொண்டாற்றும் மனநிலையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|