முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 24வது வாரம் சனிக்கிழமை 2021-09-18
முதல் வாசகம்
இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-16
அன்பிற்குரியவரே, அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார்.
கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்.
திபா 100: 1-2. 3-4. 5
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள். 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி
5 ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15
அக்காலத்தில் பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.
வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன.
இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.'' இவ்வாறு சொன்னபின், ``கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்று உரக்கக் கூறினார்.
இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: ``இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே `அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.'
இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
கவலை, செல்வம், இன்பங்கள் !
விதைப்பவர் பற்றிய உவமையைப் பலமுறை கேட்டிருக்கிறோம். நான்கு வகையான விதைகளைப் பற்றியும் தியானித்திருக்கிறோம். இன்று மூன்றாவது வகையான விதைகளைப் பற்றி மட்டும் கொஞ்சம் நம் கவனத்தில் கொள்வோம். இந்த விதைகள் முட்செடிகள் நடுவே விழுந்தன. கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன என்று கூறிய இயேசு, அதற்குரிய பொருளையும் இவ்வாறு கூறுகிறார்: முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்டும், கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
நம்மில் பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள்தானே? நாம் இறைவார்த்தையைக் கேட்கிறோம். ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இறைவார்த்தை காட்டும் பாதையிலே நாம் முதிர்ச்சி அடையமுடிவதில்லை. காரணம், கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. இங்கு கவலை என்பது உலகப் போக்கிலான கவலை: எதை உண்போம், எதைக் குடிப்போம், நாளை என்ன செய்வோம் என்பது பற்றிய அளவுக்கதிகமான அக்கறை. செல்வம் சேர்ப்பது இன்னொரு தடை. வாழ்வில் வரும் இன்பங்கள் மூன்றாவது தடை. குறிப்பாக, உணவு, பொழுதுபோக்கு, களியாட்டம்... போன்றவைதான் வாழ்வில் வரும் இன்பங்கள். இவைதாம் நாம் முதிர்ச்சி அடையாமல் தடுக்கின்றன என்கிறார் ஆண்டவர். எனவே, உலகக் கவலை, செல்வம், தொலைக்காட்சி, கிரிக்கெட் போன்ற உலக இன்பங்களில் நாம் மூழ்கிவிடாமல், இறைவார்த்தை நம்மில் முதிர்ச்சி அடைய செபத்துக்கும், இறைப்பணியில் ஈடுபடுவதற்கும் நம் வாழ்வில் போதுமான நேரத்தை ஒதுக்க முன் வருவோம்.
மன்றாட்டு:
இன்பத்தின் ஊற்றே இறைவா, உலக இன்பங்களும், கவலைகளும், செல்வத்தின்மீது அளவுகடந்த ஆர்வமும் நான் இறைவார்த்தையின்படி வாழாதபடி நெருக்கிவிடுகின்றன என்று எடுத்துச் சொன்னதற்காக நன்றி. உலக இன்பங்களைவிட, நீர் தரும் ஆறுதலும், உம்மோடு;, உமக்காக செலவழிக்கும் நேரமும் எவ்வளவோ மேலானவை என்பதை நான் உணரச் செய்யும். ஆமென்.
|