யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-09-17

புனித அன்றூ




முதல் வாசகம்

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 2-12

அன்பிற்குரியவரே, இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம் தரும் வார்த்தைகளுக்கும், இறைப் பற்றுக்குரிய போதனைகளுக்கும் ஒத்துப்போகாதவர்கள், தற்பெருமை கொண்டவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள்; விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன. இறைப் பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள். கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
திருப்பாடல்கள் 49: 5-6. 7-9. 16-17. 18-19

5 துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி

7 உண்மையில், தம்மைத் தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. 8 மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது. 9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? பல்லவி

16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! 17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. பல்லவி

18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், `நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், 19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உடைமைகளைக் கொண்டு பணிவிடை !

இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வாக்கியத்தை மட்டும் இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்: அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். சீடர்கள் பலவிதங்களில் பணி செய்ய முடியும். ஆனால், தங்களுடைய உடைமைகளைக் கொண்டு பணிவிடை செய்வது என்பது அர்ப்பணத்தின் ஆழமான ஒரு நிலை. பணியை, சேவையை ஒரு வேலையாகப் பார்க்காமல், ஒரு வாழ்வு அர்ப்பணமாக, தங்களையும், தம்மிடம் இருந்த அனைத்தையும் ஆண்டவருக்குக் கையளிக்கின்ற பற்றற்ற மனநிலையை இந்தச் சீடர்களிடம், குறிப்பாக பெண் சீடர்களிடம் காண்கிறோம்.

நாம் எப்படிப்பட்;ட சீடர்களாக இருக்கிறோம் என்று நம்மைக் கொஞ்சம் ஆய்வு செய்வோமா? நமது உடைமைகளை - பணம், திறமைகள், ஆற்றல்கள், நேரம், அன்பு- இத்தகைய உடைமைகளை நாம் இயேசுவுக்காக செலவழித்து அவருக்குப் பணிவிடை செய்கிறோமா? என்பதே இ;ன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு விடுக்கும் அறைகூவல். இயேசுவை விசுவசித்தால் மட்டும் போதாது, ஆண்டவர் என்று அறிக்கை இட்டால் மட்டும் போதாது, அவருக்குப் பணிவிடை செய்யவேண்டும். நமது உடைமைகள் என்று நாம் கருதும் அனைத்தையும் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்ய முயற்சி செய்வோம்.

மன்றாட்டு:

இறையாட்சியின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். என்னை உம் சீடனாக, அன்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறேன். உமக்குப் பணிவிடை செய்வதே என் வாழ்வும், கடமையும் என்பதை உணர்ந்து என் வாழ்வை, என்னை முழுவதும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். எனக்கு உடைமையாக நீர் தந்த அனைத்தையும் கொண்டு உமக்குப் பணிவிடை செய்ய எனக்கு அருள்தாரும். ஆசிர்வதியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.