யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் வியாழக்கிழமை
2021-09-16
முதல் வாசகம்

உன்னைப் பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு;
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16

அன்பிற்குரியவரே, நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும் அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து. இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள் கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே. இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகும். உன்னைப் பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு; அவைகளில் நிலைத்திரு; இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
திருப்பாடல்கள் 111,: 7-8. 9. 10

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. பல்லவி

10 ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்றார்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50

அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ``இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே'' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, ``சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்'' என்றார். அதற்கு அவர், ``போதகரே, சொல்லும்'' என்றார். அப்பொழுது அவர், ``கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, ``அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் சொன்னது சரியே'' என்றார். பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ``இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்'' என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ``உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். ``பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?'' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''பன்னிருவரும் இயேசுவுடன் இருந்தனர்... பெண்கள் சிலரும் அவரோடு இருந்தார்கள்'' (லூக்கா 8:2-3)

கடவுள் மனிதரோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்ற ''நற்செய்தி'' கடவுளிடமிருந்தே வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த நற்செய்தியைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல கடவுள் மனிதரையே கருவிகளாகப் பயன்படுத்துகின்றார். கடவுள் தேர்ந்துகொண்ட தனிச்சிறப்பான நற்செய்தித் தூதுவர் இயேசுவே. இவர் பாலஸ்தீன நாட்டில் ஒரு நாடோடி போதகராகச் செயல்பட்டார். அக்கால மறைநூல் அறிஞரைப் போல உயர்பதவி இயேசுவுக்கு இருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண கலிலேய மனிதர்; சமுதாயத்தில் உயரிடம் அவருக்கு ஒதுக்கப்படவில்லை; அதிகாரமும் ஆட்சிப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவருக்குத் துணையாகச் சென்றவர்கள் தலைசிறந்த படிப்பாளிகள் அல்ல; மீன்பிடித்தல், வரிதண்டுதல் போன்ற தொழில்களே அவர்களது பிழைப்புக்கு வழியாயிருந்தன. மேலும், இயேசுவோடு சில பெண்களும் துணையாகச் சென்றார்கள். இவர்களில் சிலர் பேய்பிடியால் துன்புற்றவர்கள். அவர்கள் இயேசுவை அணுகிச் சென்று அவர் வழியாக நலம் பெற்றதால் கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் நேரடியாக அனுபவித்திருந்தார்கள். பெண்கள் என்றாலே சமுதாயத்தில் தாழ்நிலையைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவோடு கூட வழிநடந்தவர்களுள் நோய்நொடிகளால் அவதிப்பட்ட (குணமான) பெண்களும் இடம்பெற்றனர் என்பது வியப்புக்குரியதே.

தம் நற்செய்தியைப் பரப்புவதற்குக் கடவுள் தேர்ந்துகொள்கின்ற மனிதர் சாதாரணமானவர்கள். நம் ஒவ்வொருவரையும் கடவுள் தம் நற்செய்தியின் தூதுவராகத் தெரிந்துகொள்ள முடியும் என்றால் கடவுளின் வியத்தகு அன்புதான் என்னே! இத்தொழிலில் ஈடுபடுவதற்குத் தனிப் படிப்போ தகுதியோ தேவையில்லை. கிறிஸ்துவை நாம் அன்புசெய்ய வேண்டும்; அவரை நம் உள்ளத்திலும் இதயத்திலும் ஏற்கவேண்டும்; அவரோடு வழிநடக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலை நம்மிடம் இருந்தால் போதும், நாம் நற்செய்தி அறிவிக்கத் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை இவ்வுலக மக்களோடு பகிர்ந்துகொள்ள நீர் எங்களை அழைக்கின்றீர் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.