யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் சனிக்கிழமை
2021-09-14

திருச்சிலுவையின் மகிமை




முதல் வாசகம்

பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்
திருப்பாடல்கள் 78: 1-2. 34-35. 36-37. 38

1 என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். பல்லவி 34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். 35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். பல்லவி

36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். 37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. பல்லவி

38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.''

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ''மகிழ்ச்சியடைகின்றார்'' (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.