யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-09-12

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50:5-9,பதிலுரைப்பாடல்: திபா. 116:1-6,8-9,திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2:14-18,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

மீட்புக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நமது சிலுவையை சுமந்து கொண்டு ஆண்டவரைப் பின்பற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவ வாழ்வென் பது ஒரு சீடருக்குரிய வாழ்வு. அற்புதங்களையும், அதிசயங்களையும் எதிர்பார்க்காமல், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பயணத்தைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அரச அதிகாரத்தோடு கூடிய மெசியாவை அல்ல, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை நாம் பின்பற்ற வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம் என்பதை நினைவில் கொண்டு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இறையாட்சியின் இலட்சியங்களுக்காக நம்மை முழுவதும் இழந்து கடவுளின் அரசை இவ்வுலகில் நிலைநாட்டும் வரம்வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்பு வித்தேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50:5-9

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் புற்றவாளிஎனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்:
பதிலுரைப்பாடல்: திபா. 116:1-6,8-9

ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்: ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். பல்லவி:

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன: பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன: துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்: ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். பல்லவி:

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்: நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாது காக்கின்றார்: நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். பல்லவி:

என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்: என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். பல்லவி:

இரண்டாம் வாசகம்

நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2:14-18

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்: குளிர் காய்ந்து கொள்ளுங்கள்: பசியாற்றிக் கொள்ளுங்கள்: " என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். ஆனால், "ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன " என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? " என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் " என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? " என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா " என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் " என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சென்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் " என்று கடிந்துகொண்டார். பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, " என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூ க்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மீட்பு அளிப்பவராம் இறைவா,

உம் திருமகனின் சிலுவைப்பாதையைப் பின்பற்றி உலகில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்டுபவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை மீட்பின் பாதையில் வழி நடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவராம் இறைவா,

உலக மக்கள் அனைவரும் உம் திருமகனின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை உணரவும், அவரது சிலுவையின் வழியாக நீர் செயல்படுத்திய மீட்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் தேவையான மனதை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நன்மை செய்பவராம் இறைவா,

எங்கள் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும், கிறிஸ்துவைப் பின்பற்றி தன்னலமற்ற சேவை செய்பவர்களாக திகழவும், மக்களின் நலனுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்பவர்களாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வை வழங்குபவராம் இறைவா,

உமது மக்களாகவும், உம் திருமகனின் சீடர்களாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், பசி, நோய், துன்பம் போன்றவற்றால் வேனையுறும் மக்களுக்கு பணியாற்றி, புதுவாழ்வு அளிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

துன்புற அழைப்பவராம் இறைவா,

உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பயணத்தைப் பின்பற்றி, இறையாட்சியின் இலட்சியங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

குறைகளை களைந்து நிறைவான வாழ்வு வாழ்வதுவே வாழ்வின் லட்சியம் என்பதனை உணர்ந்து, அதனை மெசியாவாலேயே தந்திட முடியும் என்று உணர்ந்து வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை தருபவராம் இறைவா,

நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வின் நிறைவே இறைவா,

வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய ஆவியின் ஞானத்தை நிறைவாகத் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

நான் யார் ?

‘நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்வி இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிறித்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களே, அவரைப் பல்வேறு பார்வைகளில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வியப்பூட்டும் செய்திதான். சிலர் இயேசுவை அற்புதங்களும், அருங்குறிகளும் செய்பவராகப் பார்க்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளுக்குச் செல்பவர்கள், அருங்கொடை ஆர்வலர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இன்னும் சிலர் அவரை சடங்குகளிலும், வழிபாடுகளிலும் சிறைபட்டவராகப் பார்க்கின்றனர். பெரும்பாலான மரபுக் கிறித்தவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருசிலர் இயேசுவைத் தீவிர சமூகப் போராளியாகப் பார்க்கின்றனர். மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் உள்ளனர்.

இத்தகைய பார்வைகள் அனைத்துமே உண்மையைக் கொண்டுள்ளவை, ஆனால் குறைவானவை, முழுமையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். விவிலியம் காட்டும் இயேசு பன்முகத் தன்மை கொண்டவர். அவர் கடவுளின் மகனாகிய மெசியா, ஆனால் மனித இயல்பில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர். நோயாளர்கள்மீது பரிவு கொண்டு, குணமாக்கியவர். ஆனால், தீமைகளைக் கண்டு சினந்து, சாட்டை எடுத்தவர். இத்தகைய முழுமையான, பன்முகத் தன்மை கொண்ட இயேசுவை நம் ஆண்டவராகவும், வழிகாட்டியாகவும், மீட்பராகவும் அறிக்கை இட்டு போற்றுவோம்.

மன்றாட்டு:

இயேசுவே, நீரே எங்கள் ஆண்டவர், நீரே இறைமகன், நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தாரும்;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.