யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-09-10

புனித யோவான் கிறிசோஸ்தம்




முதல் வாசகம்

எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2,12-14

விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இயேசுவும் இட்ட கட்டளையின்படி, கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
திருப்பாடல்கள் 16: 1-2,5. 7-8. 11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ``பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர். நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ''மகிழ்ச்சியடைகின்றார்'' (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.