யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வியாழக்கிழமை
2021-09-09




முதல் வாசகம்

ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடி கொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப் பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 2
திருப்பாடல்கள் 150: 1-2. 3-4. 5-6

1 தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 2 அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! பல்லவி

3 எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். 4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! பல்லவி

5 சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! `கலீர்' எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! 6 அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள். உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ''மகிழ்ச்சியடைகின்றார்'' (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.