முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 22வது வாரம் சனிக்கிழமை 2021-09-04
முதல் வாசகம்
உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 21-23
சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது.சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.
திருப்பாடல்கள் 54: 1-2. 4,
பல்லவி: இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார். 1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். 2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். பல்லவி
4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; 6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
``ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே''
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5
ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், ``ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?'' என்று கேட்டனர்.
அதற்கு இயேசு மறுமொழியாக, ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்று கூறினார்.
மேலும் அவர்களிடம், ``ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர்
கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்'' (லூக்கா 6:1)
ஓய்வு நாளில் எந்தெந்த வேலைகள் அனுமதிக்கப்படவில்லை என்னும் பட்டியல் மிக நீண்டது. முப்பத்தொன்பது வகையான வேலைகள் ஓய்வு நாளில் செய்யத் தகாதவை என்று சட்டம். அறுவடை செய்தல், தானியத்தைப் பிரித்தெடுத்தல், உணவு தயாரித்தல் என்னும் வேலைகள் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இயேசுவின் சீடர்கள் அவற்றை மீறி, ''கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்'' (லூக் 6:1). ''ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு'' (காண்க: விப 20:8-11) என்னும் சட்டம் கடவுள் மோசே வழியாகக் கொடுத்த கற்பனைகளில் முக்கியமான ஒன்று. இக்கட்டளை பொதுவான ஒன்றாக இருந்ததால் அதற்கு விளக்கங்கள் பல எழுந்தன. ஓய்வு நாளைத் ''தூயதாகக் கடைப்பிடிப்பது'' எப்படி? அந்நாளில் ஓய்வு எடுப்பது எப்படி? எந்தெந்த வேலைகளைச் செய்யலாம்? தடைசெய்யப்பட்ட வேலைகள் யாவை? இவை பற்றிய விளக்கங்களை மக்களுக்குப் பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றோர் விரிவாகவும் துல்லியமாகவும் எடுத்துக் கூறினர். எல்லா சமுதாயங்களிலும் தூய்மை பற்றிய ஒழுங்குகள் உண்டு. அதுபோலவே யூத சமயத்திலும் பல ஒழுங்குகள் இருந்தன. ஆனால் இயேசு அந்த ஒழுங்குகள் மனிதரின் நன்மைக்காகவே எழுந்தனவென்று வலியுறுத்துகிறார்.
ஓய்வு நாள் பற்றிய விளக்கம் அளிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டு என்பதைப் பரிசேயர்கள் அறியத் தவறிவிட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ''ஓய்வு நாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே'' (லூக் 6:5) என்று கூறி, தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். இதன் பொருள் என்ன? ஓய்வு நாளில் இயேசுவின் சீடர்கள் தடைசெய்யப்பட்ட வேலை செய்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு அந்த விளக்கம் சரியானதல்ல என நிலைநாட்டுகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக முற்காலத்தில் தாவீது அரசர் குருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய ''அர்ப்பண அப்பத்தை''த் தாமும் உண்டு தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்ததை முன்வைக்கிறார். தாவீது செய்ததும் பரிசேயர் கணிப்புப்படி சட்ட விரோதம் என்றுதான் கணிக்கப்பட வேண்டும். எனவே இயேசு தம்மைத் தாவீது அரசருக்கும் மேலாக உயர்த்துவதையும் இவண் காண்கின்றோம். மேலும், தொடக்க காலத் திருச்சபையில் ஓய்வு நாள் பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்தது என்பதும் நற்செய்தி நூல்களில் காணப்படுகிறது. யூத சமயம் வழங்கிய தூய்மை சாய்ந்த சட்டங்களையும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களையும் இயேசு ஏற்கவில்லை. அச்சட்டங்களும் விளக்கங்களும் மனிதரின் நலனுக்கு எதிராகப் போனால் அவற்றால் யாதொரு பயனும் இல்லை எனவும், மாறாக அவற்றை ஒதுக்க வேண்டும் எனவும் இயேசு கற்பித்தார். இன்றும் கூட, சட்டத்தின் பெயரால் மனித நலன் புறக்கணிக்கப்படுகின்ற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. இயேசுவின் சீடர்களும் மனித நலனை ஒடுக்குகின்ற சட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனித நலனை மேம்படுத்துகின்ற வழிகளைக் காணவேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசு வழங்கிய போதனைகளை நாங்கள் கருத்தாகக் கடைப்பிடிக்க அருள்தாரும்.
|