யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-09-03
முதல் வாசகம்

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல்கள் 100: 1-2. 3. 4. 5

! 1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்;

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, ``யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!'' என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்'' என்றார். அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: ``எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் `பழையதே நல்லது' என்பது அவர் கருத்து.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார். ஏனெனில் 'பழையதே நல்லது' என்பது அவர் கருத்து'' (லூக்கா 5:39)

கடவுளாட்சியைப் பல உவமைகள் வழியாக விளக்கினார் இயேசு. அவர் கூறிய உவமைகளில் திருமணம், மணமகன், திருமண விருந்து போன்ற உருவகங்கள் இறையாட்சியின் பண்புகள் யாவை என எடுத்துக் கூறப் பயன்பட்டன. இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிடுகிறார். கடவுள் நம்மோடு பகிர்ந்துகொள்கின்ற புதிய வாழ்வை மணவிருந்தாக உருவகிக்கிறார். விருந்துக்குச் செல்வோர் அங்கு பரிமாறப்படுகின்ற சுவையான உணவை உண்டு மகிழ்வர்; குடிப்பதற்கு வழங்கப்படுகின்ற திராட்சை மதுவைப் பருகி ஆனந்தம் கொள்வர். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் நல்ல தரமான திராட்சைச் செடிகள் வளர்ந்தன. அவற்றிலிருந்து பெறப்பட்ட பழங்களிலிருந்து சுவையான திராட்சை மது தயாரிக்கப்பட்டது. திருமண விருந்துகளின்போதும் பிற கொண்டாட்டங்களிலும் திராட்சை மது அருந்துவது வழக்கமாக இருந்தது. ஆக, விழாவுக்குச் செல்வோர் நோன்பிருப்பதை நிறுத்திவிட்டு உண்டு குடித்து மகிழ்வது இயல்பு. இயேசு விருந்துகளில் கலந்துகொண்டார்; ஏன், சாதாரண மக்களோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் பாவிகள் என்று கருதப்பட்டவர்களோடும் ஒரே பந்தியில் அமர்ந்து அவர் உணவு அருந்தினார்; திராட்சை மது குடித்தார். இது பரிசேயருக்குப் பிடிக்கவில்லை. இயேசுவும் அவர்தம் சீடர்களும் நோன்பிருக்கவில்லை என்பது பரிசேயரின் குற்றச்சாட்டு. ஆனால் இயேசுவோ பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார். அவர்கள் பழைமையில் ஊறிப்போய், புதிதாக மலர்ந்திருக்கின்ற காலத்தில் புகுவதற்கு இன்னும் தயாராக இல்லை என அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், திராட்சை மது எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அவ்வளவு தரத்திலும் சுவையிலும் சிறந்ததாக இருக்கும் என்னும் அனுபவ உண்மை வழியாக இயேசு கடவுளாட்சி பற்றிய ஆழ்ந்த கருத்தினை எடுத்துரைக்கிறார். பரிசேயரும் பிறரும் பழைய திராட்சை மதுவே நல்லது என்பதில் ஓரளவு உண்மை உள்ளது என இயேசு ஒப்புக்கொள்கின்றார். ஏனென்றால் சில பொருள்கள் பழையவை ஆகும்போது நல்ல குணமுடையவையாக மாறக் கூடும். ஆனால் பழைய பொருள்கள் எல்லாமே நல்லவையாக இருப்பதில்லை. பழைய கந்தைத் துணி உடுப்பதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. வாடிப்போன பழைய காய்கறிகள் சமையலுக்கு நல்லவை அல்ல. அதுபோலவே இயேசுவும் பரியேரின் பழைய போக்குகள் கைவிடப்பட வேண்டும் என்கிறார். இயேசு கொணர்கின்ற புதிய பார்வையும் கண்ணோட்டமும் சிந்தனைப் பாணியும் பழைமையில் ஊறிய பரிசேயருக்கு அபத்தமாகப் பட்டன. அவர்கள் பழையதே போதும், அதுவே நல்லது என ஊறிப்போன போக்கிலேயே நிலைத்துநிற்க விரும்பினார்கள்; சட்டத்தின் பிடியில் மக்களை அமுக்கிவைக்கப் பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ ஒரு புதிய பார்வையைக் கொணர்ந்தார். இயேசு கொணர்ந்த புதிய பார்வை யாது? கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்கின்றார்; பாவிகளைத் தேடிச் செல்கின்றார்; எந்த மனிதருக்குமே அவர் தம் அன்பையும் இரக்கத்தையும் அளித்திட மறுப்பதில்லை; மனம் திரும்பி அவரைத் தேடிச்செல்வோரை அவர் இருகரம் விரித்து வரவேற்கக் காத்திருக்கிறார். - இதுவே இயேசு கொணர்ந்த புதிய பார்வை; புதிய செய்தி (காண்க: லூக் 5:31-32). இப்புதிய பார்வையையும் புதிய அணுகுமுறையையும் நாம் ஏற்று நம் வாழ்வோடு இணைக்கும்போது பழைய பார்வையும் பழைய அணுகுமுறையும் தாமாகவே மறைந்து போகும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசு கொணர்ந்த புது வாழ்வை நாங்கள் திறந்த உள்ளத்தோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.