யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் வியாழக்கிழமை
2021-09-02

புனித அன்னைதெரேசா




முதல் வாசகம்

நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்துகொள்ள வேண்டும்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 9-14

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட நாள்முதல் உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் பயன் தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப் பற்றிய அறிவில் வளரவேண்டும். நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும். மகிழ்ச்சியோடு, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவ மன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
திருப்பாடல்கள் 98: 2-6

: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார். 2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3 உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

அக்காலத்தில் இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, ``ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்துகொள்ள வேண்டும்.' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை !

மீனவரான சீமோன் பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வு இது. அவரது வாழ்வையே புரட்டிப் போட்ட நிகழ்வு என்றும் சொல்லலாம். ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னபோது, சீமோன் பேதுருவின் பதில் மொழி: “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை” என்பது. நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் உண்டு. பாடுபட்டுப் படித்தும் தேர்வில் தோல்வி அடைவோர், பாடுபட்டு வேலை தேடியும் வேலை இன்றித் தவிப்போர், பாடுபட்டுப் பணம் சேர்த்தும், அதை ஒரே நாளில் இழந்துவிடுவோர், பாடுபட்டு ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தும், அவர்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதைக் கண்டு கலங்கும் பெற்றோர், பல மருத்துவர்களிடம் சென்றும் நலம் பெறாதோர்... எனப் பல தரப்பட்ட மக்கள் சீமோன் பேதுருவின் வரிசையில் நிற்கின்றனர்.

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பேதுருவின் பதில் மொழியிலுள்ள இரண்டாம் பகுதி எடுத்துச் சொல்கிறது: “ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ”. அதாவது, சொந்த முயற்சியில் நம்பிக்கை வைக்காமல், இறையாற்றலில், இறைவனின் பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது. அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவுக்கு மீன்பாடு கிடைத்தது. “மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை. கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது” (உரோ 9:16) என்னும் இறைமொழியை நினைவில் கொள்வோம்.

மன்றாட்டு:

இரக்கத்தின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய சொந்த விருப்பத்தினாலோ, பாடுபட்டு உழைப்பதாலோ நாங்கள் எதையும் சாதித்துவிடப் போவதில்லை. உமது இரக்கத்தால் மட்டுமே எங்கள் உழைப்புக்குக் கனிகள் கிடைக்கும் என்று அறிகிறோம். ஆண்டவரே, எங்கள் உழைப்பை ஆசிர்வதியும். உமது இரக்கத்தால் எங்கள் பணிகளில் எங்களுக்கு வெற்றியைத் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.